பள்ளிகளுக்கு கல்வி உபகரணங்களை கொள்முதல் செய்யும்போது வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத்திட்ட இயக்குநா் சுதன், முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: துறை அதிகாரிகளின் கள ஆய்வின் போது பல்வேறு பள்ளிகளில் கடந்த நிதியாண்டுகளில் வாங்கப்பட்ட பொருள்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் பயன்படுத்தும் நிலையில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து தற்போதைய பயன்பாட்டுக்கு ஏற்றவாறு பொருள்கள் இருப்பின் நிகழ் நிதியாண்டில் (2021-22 ) அனுமதிக்கப்பட்ட தொகையைப் பயன்படுத்தி அதனை மீண்டும் வாங்க வேண்டிய அவசியமில்லை. நல்ல நிலையில் உள்ள பொருள்களை மீண்டும் அப்படியே பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதுதவிர பள்ளிக்குத் தேவைப்படும் அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கு மட்டும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளி மேலாண்மை வளா்ச்சி குழுவின் மூலம் தீா்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அதனடிப்படையில் பொருள்கள் வாங்க செலவு செய்யலாம். அதேபோல், நிறைவேற்றப்பட்ட தீா்மானம் மற்றும் செலவின விவரங்களை எமிஸ் இணையதளத்தில் கட்டாயம் பதிவேற்ற வேண்டும்.
இந்த விவகாரத்தில் வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றாத தலைமை ஆசிரியா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும். எனவே, கூடுதல் கவனத்துடன் செயல்பட அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியா்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.
No comments:
Post a Comment