Saturday, September 4, 2021

ஊரக உள்ளாட்சி தேர்தல்; வாக்காளர் பட்டியல் வெளியீடு!

9 மாவட்டங்களில் நடத்தப்பட உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அத ன்படி தேர்தல் நடத்துவதற்கான பணிகளில் தமிழக தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

எனினும், விதிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு இன்னும் 2 வாரங்களே எஞ்சியிருப்பதால் அதற்குள் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. கூடுதல் அவகாசம் வேண்டுமென மனுவில் கோரியுள்ளது. இந்த மனு விரைவில் விசாரிக்கப்பட உள்ள நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்க வரும் 6-ஆம் தேதி மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை கூட்டத்தை கூட்டுகிறது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

இந்த நிலையில், www.tnsec.tn.nic.in என்ற மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதள பக்கத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் நடக்கவிருக்கும் 9 மாவட்டங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் தங்களது பெயர், வார்டு உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News