மாணவர்களுக்கு மடிக்கணினிகள் எப்போது வழங்கப்படும்? என்று அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார்.
கடந்த ஆட்சியில் தேர்தல் வாக்குறுதியாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஏதேனும் ஒரு வகுப்பில் மடிகணினி வழங்கப்பட்டது.
ஒரு வேளை பள்ளியில் மடிக்கணினி அளிக்கப்படாத நிலையில் முதலாம் ஆண்டு கல்லூரி சேரும்போது மடிக்கணினி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் பள்ளிப் படிப்போடு மாணவர்கள் நிறுத்திக் கொள்ளாமல் கல்லூரி படிப்பை தொடர வேண்டும் என்பதுதான்.
ஆனால் தற்போது மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் மறு சீரமைக்க திமுக அரசுமுடிவெடுத்துள்ளதாக சொல்லப்படும் நிலையில் மடிக்கணினிகள் இன்னும் வழங்கப்படாமல் உள்ளன.
இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டப்பேரவையில் பேசும் போது, ” படிப்படியாக அனைத்து மாணவர்களுக்கும் அரசாணையில் கூறியபடி மடிக்கணினிகள் வழங்கப்படும். 2017 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 11 லட்சத்து 72 ஆயிரத்து 517 மடிக்கணினிகள் தர வேண்டியுள்ளது” என்று மார்க்சிஸ்ட் எம்எல்ஏக்கள் நாகை மாலி சின்னதுரை கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “இனிவரும் காலங்களில் கல்வியாண்டு தொடங்கும் 6 மாதங்களுக்கு முன்பே அதற்கான திட்டம் வகுத்து உரிய நேரத்தில் மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
No comments:
Post a Comment