தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அரசு பணிக்கான தேர்விற்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு உள்ள விதிமுறைகளை மாற்றி அறிவித்துள்ளது. இதனுடன், வயது வரம்பு சலுகைகள், இட ஒதுக்கீடு, பாடத்திட்டம் மற்றும் தேர்வர்களுக்கான புதிய அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளது.
புதிய அறிவுரைகள்:
கடந்த ஆண்டு முதல் அரசுப்பணிகளுக்கான காலியிடங்களை நிரப்பும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகள் நடத்தப்பட வில்லை. இந்நிலையில், இன்று டி.என்.பி.எஸ்.சி வாரியம் குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 போன்ற தேர்வுகளை பற்றிய முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி, முக்கிய அதிகாரிகள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்கான புதிய அறிவுரைகள் வெளியிடப்பட்டுள்ளது.
அரசின் அறிக்கையில், தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை, பொதுத்தகுதி நிபந்தனை, வயது வரம்பு சலுகை மேலும், இட ஒதுக்கீடு, பாடத்திட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு அறிவுரைகள் மற்றும் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்களுக்கான புதிய அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளது.
புதிய அறிவுறுத்தல்கள்:
நடைமுறையில் இருந்து வரும் One Time Registration ஐந்து வருடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
பதிவு விண்ணப்பத்தில் புகைப்படம், கையொப்பம் போன்றவை தெளிவாக இல்லை என்றால் அவை நிராகரிக்கப்படும்.
பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் பாலின (பெண்கள்) விண்ணப்பதாரர்கள் பெண்களுக்கான 30% இடஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் மீதமுள்ள 70% காலிப்பணியிடங்களுக்கான இடஒதுக்கீட்டில், ஆண்கள் , மூன்றாம் பாலினத்தவர்கள் , மூன்றாம் பாலின (ஆண்கள்) விண்ணப்பதாரருடன் சேர்ந்து போட்டியிடத் தகுதியானவர்கள்.
பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் போதுமான விண்ணப்பதாரர் இல்லாத பட்சத்தில் அந்த இடங்களில் ஆண்கள் மற்றும் மூன்றாம் பாலின (ஆண்கள் ) நிரப்பப்படலாம்.
ஆண் விண்ணப்பதாரர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியை உடையவராக இருக்க கூடாது.
பெண் விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே மனைவியுடன் வாழும் ஒருவரை திருமணம் செய்தவராக இருத்தல் கூடாது.
பணிக்கு விண்ணப்பிக்கும் போது போதுமான தமிழறிவு இல்லாதவராக இருந்தாலும், பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் இரண்டாம் வகுப்பு மொழித்தேர்வில் தமிழில் முழுத்தேர்வு பெற்றிருக்க வேண்டும், தவறினால் அவர் பணியில் இருந்து விடுவிக்கப்படுவர்.
தேர்வாணையத்தின் தலைவர்கள், அதிகாரிகள், அலுவலர்கள் போன்றவர்களின் அதிகாரம் அல்லது செல்வாக்கை பயன்படுத்தினால் அவர் 3 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடை செய்யப்படுவார்கள்.
இடஒதுக்கீட்டிற்க்கான சான்றிதழ், கல்வி சான்றிதழ்களை போலியானதாக சமர்பித்தாலும், அவற்றில் போலியான திருத்தங்களை செய்திருந்தாலும், அவர்கள் மீது நிரந்தரமாக குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தேர்வர்கள் தேர்வுக்கு வரும் போது மது அருந்திவிட்டு வந்தாலும், புகை பிடிப்பவர்கள் போன்றவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டாலும் 3 ஆண்டுகள் தேர்வு எழுத முடியாது.
ஆள்மாறாட்டம் மற்றும் ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்வு மையத்தின் அனைத்து நுழைவு வாயில்களும் தேர்விற்கு 45 நிமிடங்களுக்கு முன்னதாகவே மூடப்படும். அதன்பிறகு வரும் தேர்வர்கள் தேர்விற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
No comments:
Post a Comment