Friday, October 8, 2021

நீட் தேர்வு பாடத்திட்டம் மாற்றம் – மத்திய அரசு தகவல்!

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வுக்கான பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

பாடத்திட்டம் மாற்றம்:

தேசிய தகுதி மற்றும் மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வு வருடத்திற்க்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படுகிறது. முதுகலை, இளங்கலை மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளுக்கு என்று தனித்தனியாக நீட் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. குறிப்பிட்ட நிலையில் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே சேர்க்கை பெற முடியும். நடப்பு கல்வியாண்டில் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர் சேர்க்கைக்காக நீட் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு வரும் நவம்பர் மாதம் நடக்க இருக்கிறது. ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் தேர்வுக்கான பாடத்திட்டத்தை மாற்றி மத்திய அரசு அறிவித்தது. தேர்வு நெருங்கும் சமயத்தில் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதை எதிர்த்து மருத்துவ மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர். வழக்கின் விசாரணையில் தேர்வு ஜனவரி மாதம் நடத்த தள்ளிவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.

மத்திய அரசின் முடிவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எதிர்த்தனர். மருத்துவப் படிப்பு முழுவதும் வணிகமயமாகி விட்டதாகவும், தனியார் மருத்துவக் கல்லூரியில் காலியிடங்கள் வந்துவிடக்கூடாது என்பதற்காக பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதாக தாங்கள் கருதுவதாகவும் நீதிபதிகள் கூறினர். இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நீதிமன்றத்திற்கு வந்த நிலையில், புதிய பாடத்திட்ட மாற்றம் 2022-23ஆம் கல்வி ஆண்டு முதலே அமலுக்கு வரும் என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News