கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்புவரை சுமார் 450க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவருகின்றனர். இந்த நிலையில், பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் சில மாணவர்கள் இயற்பியல் வகுப்பை கட் அடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளனர். முதல் வகுப்பில் இருக்கும் மாணவர்கள், இரண்டாவது வகுப்பான இயற்பியல் வகுப்பில் கலந்துகொள்ளாமல் வெளியே சென்றுள்ளனர்.
இதனைக் கண்டிக்கும் விதமாக, அம்மாணவர்களைக் கரும்பலகையின் கீழே முட்டிப் போட வைத்த இயற்பியல் ஆசிரியர் சுப்பிரமணியன், தன்னை எதிர்த்துப் பேசிய மாணவர் ஒருவரை கையில் வைத்திருந்த பிரம்பால் தாக்கியுள்ளார். அத்துடன், அம்மாணவரைக் கால்களால் எட்டி உதைத்துள்ளார். இதைக் கடைசி பெஞ்ச் மாணவர்கள் சிலர் ரகசியமாகப் படம் பிடித்துள்ளனர். அத்துடன் இந்த வீடியோ காட்சிகளை சமூக வலைதளத்தில் பகிர்ந்தும் உள்ளனர். இதனால் இந்த வீடியோ மாவட்ட ஆட்சியர் வரை சென்றது.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிறுவர்களுக்கு எதிரான குற்றம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் ஆசிரியர் சுப்பிரமணியன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு (15.10.2021) அவர் கைது செய்யப்பட்ட நிலையில், ஆதிதிராவிடர் நலத்துறையால் ஆசிரியர் சுப்பிரமணியன் இன்று பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், பள்ளிக்கு வரும் மாணவர்களை ஆசிரியர்கள் துன்புறுத்தக் கூடாது என தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். ''பள்ளிக்கு வரும் மாணவர்களை ஆசிரியர்கள் துன்புறுத்தக் கூடாது. அப்படி துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நர்சரி பள்ளிகளைத் திறப்பது தொடர்பாக தவறுதலான அறிக்கை வெளியாகியுள்ளது. இதுபற்றி விரைவில் தெளிவான அறிக்கை வெளியாகும். அங்கன்வாடியில் குழந்தைகளுக்குச் சத்துணவு வழங்குவது தொடர்பாக முதல்வருடன் நடந்த ஆலோசனையில் தெரிவித்திருக்கிறோம்'' என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment