Sunday, October 31, 2021

இல்லம் தேடிக் கல்வி- திராவிடத் திட்டம்; கவனமுடன் செயல்படுத்துவோம்: அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி

இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தைக் கவனமுடன் செயல்படுத்துவோம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகேயுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு இன்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "இல்லம் தேடிக் கல்வித் திட்டம் இன்னும் தொடங்கப்படவில்லை. ஆனால், அதுகுறித்து சிலர் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் அழகாக வடிவமைத்துக் கொடுத்த திட்டம்தான் "இல்லம் தேடிக் கல்வி”.

மரக்காணத்தில் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்திப் பேசும்போது, இந்தக் கல்வித் திட்டம் "திராவிடத் திட்டம்” என்றுதான் பேசினார். “திராவிடத் திட்டம்" என்று சொல்லும்போது நாங்கள் எந்த அளவுக்கு கவனம் செலுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, நாங்கள் இந்தத் திட்டத்தைக் கவனத்துடன் செயல்படுத்துவோம்.

திமுகவினர் மீது கூறப்படும் புகார்கள் மீது விசாரணை நடத்தி உண்மையாக இருந்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். ஏனெனில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு யார் தவறு செய்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதை முதல்வர் வழக்கமாகக் கொண்டுள்ளார்" என்று தெரிவித்தார்.

நவ.1-ம் தேதி முதல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், கரோனா 3-வது அலை குறித்த அச்சம் தெரிவிக்கப்பட்டு வருகிறதே என்ற கேள்விக்கு, "ஊரடங்கில் எந்தவொரு தளர்வாக இருந்தாலும் மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத் துறையிடம் ஆலோசனை கேட்டுத்தான் நாங்கள் செய்து வருகிறோம். பள்ளிகள் இயக்கத்திலும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் ஆலோசனையின்படி நடவடிக்கை இருக்கும்" என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News