Friday, November 19, 2021

தொடர்மழை முன்னெச்சரிக்கை தொடர்பாக அனைத்துவகை பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களின் பாதுகாப்பு குறித்து தொடக்கக்கல்வி இயக்குநரின் புதிய அறிவுரைகள்...


பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பு தொடர்பான வழிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. பள்ளிகளில் மழையால் பாதித்த வகுப்பறை, சுற்றுசுவர்களை மாணவர்கள் பயன்படுத்தல் உறுதிசெய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. பள்ளிகளில் மின் இணைப்புகள் சரியாக இருப்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.

தொடர் மழைக் காலம் -பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை- பள்ளியில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு சார்ந்து மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்

அனைத்து அரசு/ அரசு உதவிபெறும்/ சுயநிதி, தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு:

இணைப்பில் காணும் மதிப்புமிகு தொடக்க கல்வி இயக்குனர் செயல்முறைகளில் தொடர் மழைக்காலத்தில் பள்ளியில் மாணவர்களின் பாதுகாப்பு சார்ந்து எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள்/அனைத்து நிலை அலுவலர்கள் ஆகியோரின் கவனம் ஈர்க்கப்படுகிறது.

மேற்காண் செயல்முறைகளில் குறிப்பிட்டுள்ளவாறு

பள்ளி தலைமையாசிரியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யின் பொருட்டு பள்ளி வளாகம் மற்றும் மாணவர்கள் பள்ளிக்கு வருகை தரும் வழித்தடம், பள்ளி முடிந்து மீண்டும் வீட்டுக்கு திரும்பும் வழித்தடம் ஆகிய பகுதிகளில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பழுதடைந்த/இடிக்கப்பட வேண்டிய நிலையிலுள்ள கட்டிடங்களுக்கு அருகாமையில் மாணவர்கள் கண்டிப்பாக செல்லாமல் இருக்க கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.

2) பள்ளி வளாகத்தினுள் நீர் தேங்காமல் தலைமையாசிரியர் உடனடியாக தகுந்த நபர்களை கொண்டோ, உள்ளாட்சித் துறை அலுவலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து உடன் போர்க்கால நடவடிக்கைகளில் தண்ணீர் வெளியேற்றப்பட வேண்டும்.

3) மின் சாதனங்கள், மின்சுற்றுகள், மின் சுவிட்சுகள், மின் மோட்டார்கள் போன்றவைகளை மாணவர்கள் கண்டிப்பாக இயக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அவ்வாறு மின் வழித்தடத்தில் மின்சாதனங்கள் ஏதேனும் பழுதாகி இருப்பின் உடனடியாக மின்சார வாரிய பொறியாளருக்கு தகவல் தெரிவித்து மின் பழுது சரி செய்து மின்கசிவு அற்ற பள்ளி வளாகம் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

4) பள்ளிக்கட்டிடங்களின் மேல் தளத்தில் கண்டிப்பாக நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

5) மாணவர்கள் பள்ளிக்கு வருகை தரும் போதும், பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பும் போதும் வழித்தடங்களில் உள்ள நீர்நிலைகளுக்கு அருகில் இருந்து வேடிக்கை பார்ப்பதும் அதற்கு அருகாமையில் செல்வதையும் முற்றிலும் தவிர்க்குமாறும், அதற்கு மாற்றாக பாதுகாப்பான வழித்தடங்களில் செல்வதற்கும் வந்து போவதற்கும் அறிவுரை மீண்டும் மீண்டும் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

6) மாணவர்கள் செல்லும் வழிகளில் மின்வழித்தடத்தில் விழும் நிலையில் ஏதேனும் ஒயர்கள் இருக்கிறதா என்பதை மாணவர்கள் கவனத்தோடு பார்த்து அதன் அருகாமையில் செல்லாமல், பாதுகாப்போடு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப் படவேண்டும்.

7) எவ்வொரு சூழலிலும் மாணவர்கள் மின் சுவிட்சுகள் மின் சாதனங்களை இயக்குவதற்கு அறிவுறுத்தவும், அனுமதிக்கவும் கூடாது.

8) ஒரு குறிப்பிட்ட ஒரு கட்டிடத்தில் ஈரப்பதம் அதிகமாக இருப்பின் கட்டிடத்தை பூட்டி வைத்துக் கொண்டு ஏனைய நல்ல நிலையில் உள்ள கட்டடத்தில் மாணவர்கள் அமர வைக்க வேண்டும்.

9) ஈரப்பதம் அதிகம் உள்ள சுற்றுசுவர் ஆபத்தான நிலையில் உள்ள சுற்றுச்சுவர் அருகாமையில் மாணவர்கள் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆபத்தான நிலையில் உள்ள கட்டிட அமைப்புகள் இருப்பின் உரிய அலுவலருக்கு தகவல் தெரிவித்து அகற்ற ஏற்பாடு செய்ய வேண்டும்.

10) நீர்த்தேக்க தொட்டிகள், கழிவு நீர் தேக்க தொட்டிகள், திறந்தவெளிக் கிணறுகள் போன்றவை இருப்பின் அவற்றை பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும்.

11) பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் உள்ள மரங்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.

12) பள்ளி வளாகத்தில் கட்டிட பராமரிப்பு பணிகள், புதிய கட்டட பணிகள் நடப்பின் அதன் அருகாமையில் மாணவர்கள் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

13) மழைக்காலம் ஆதலால் மாணவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் மரத்தின் அடியில் நிற்க கூடாது என அறிவுறுத்த வேண்டும்.

14) மாணவர்களுக்கு நோய் தாக்காமல் இருக்கும் பொருட்டு சிக்கன் குனியா டெங்கு போன்ற அறிகுறிகள் இருப்பின் உடனடியாக அறிவுறுத்தி அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.

15) விடுமுறை நாட்களில் குளம் குட்டை, ஏரி, நீரோட்டமுள்ள ஆறு போன்றவற்றுக்கு அருகாமையில் செல்லாமல் இருக்க மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்

மேலும் செய்முறைகளில் குறிப்பிட்டுள்ளவாறு அனைத்து அறிவுரைகளையும் பின்பற்றி மாணவர்களுக்கு பாதுகாப்பான பள்ளி வளாகம் என்பதை உறுதி செய்வதில் அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அனைத்து நிலை கல்வி அலுவலர்கள் உறுதிபூண்டு கவனத்துடன் செயல்படுமாறும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News