சேலம் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்றின் வருகைப் பதிவேட்டில் மாணவிகளின் பெயருக்கு எதிரே சாதியும் குறிப்பிடப்பட்டிருந்தது சர்ச்சையாகிய நிலையில், அத்தகைய நடைமுறை கூடாது என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சேலம் மாவட்டம், ஆத்தூரில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை 2500 மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் இங்கு 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவிகளின் வருகைப் பதிவேட்டில் மாணவியரின் பெயர்களுக்கு அருகே அவர்களின் சாதியைக் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் ஒவ்வொரு சாதியையும், சிவப்பு, நீலம் மற்றும் கருப்பு பேனாக்களை கொண்டு வேறுபடுத்திக் காட்டியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் அந்த வருகைப் பதிவேட்டினைப் புகைப்படம் எடுத்து மாணவிகளின் பெற்றோருக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளி நிர்வாகத்தை அணுகி அதிருப்தி தெரிவித்தனர்.
பிரச்சினை பெரிதாகவே, இது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியரும் வருத்தம் தெரிவித்துள்ளார். பள்ளி மாணவிகளுக்கு அரசின் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளையும் பெற்றுத் தரும் பொருட்டே அவர்களின் சாதி விவரங்களை உறுதிப்படுத்திக் கொள்ள பெற்றோருக்கு அவ்வாரு அனுப்பப்பட்டது. வருகைப் பதிவேட்டில் சாதியை எழுதியதும் தவற், பெற்றோருக்கு அனுப்பப்பட்டதும் தவறு. இனி இதுபோல் நடக்காது என்றும் அவர் ஊடகப் பேட்டிகளில் தெரிவித்தார்.
இந்த விவரம் சேலம் மாவட்டம் முதன்மைக் கல்வி அலுவலருக்குச் செல்ல, அவரோ பள்ளித் தலைமை ஆசிரியரிடம் இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி வருகைப் பதிவேட்டில் சாதிப் பிரிவுகளைக் குறிப்பிடக் கூடாது. அகர வரிசையில் மட்டுமே மாணவ, மாணவியரின் பெயர் இடம் பெற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment