பொங்கல் விடுமுறை முடிந்து ஜனவரி 19ஆம் தேதி முதல் வழக்கம் போல் 10ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இயங்கும் என சற்று முன்னர் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதே நேரத்தில் 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத வேண்டியிருப்பதால் அவர்களுக்கு பள்ளிகள் இயங்கும் என்றும் நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்திருந்தார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் சமீபத்தில் சென்னை ஐகோர்ட் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பாதுகாப்பு கருதி ஆன்லைன் வகுப்புகளை நடத்த தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இடையில் பொங்கல் விடுமுறை வந்துவிட்டதால் பொங்கல் விடுமுறைக்கு பின் 10ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சற்று முன் பள்ளி கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஜனவரி 19 முதல் 10 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என்று அறிவித்துள்ளார். இதனை அடுத்து ஜனவரி 19 முதல் பள்ளிகள் இயங்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment