வெயில் கொஞ்சம், கொஞ்சமாக நம்மை சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. இனி வரும் நாட்களில் வெப்ப அலைகள் கூட உருவாகும்.
ஆனால், அதை எதிர்கொள்ளும் வகையில் நம் உடலை நாம் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். இதைச் சொன்னதுமே, உங்கள் மனதிற்கு சட்டென்று நினைவுக்கு வருவது குளிர்பானங்கள் ஆகும். ஆனால், இதில் உண்மை என்ன என்றால், ஆர்டிபிஷியல் தயாரிப்பு குளிர்பானங்களில் வெறும் சர்க்கரைச் சத்து மட்டுமே மிகுதியாக இருக்கும். அதில் எந்தவித ஊட்டச்சத்துகளும் இருக்காது.
செயற்கை குளிர்பானங்களை நீங்கள் அருந்துவதால், உடலில் சர்க்கரை அளவு சட்டென்று அதிகரிக்கும். இதன் எதிரொலியாக நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும். அதேசமயம், உடலுக்கு ஆரோக்கியம் தரும் குளிர்பானங்களை உங்கள் வீட்டிலேயே நீங்கள் தயார் செய்ய முடியும். இது அருந்துவதற்கு சுவையானது என்பதோடு, கோடை காலத்தில் ஏற்படும் உடல் நல பாதிப்புகளை எதிர்கொள்ள உதவிகரமாக இருக்கும்.
அதிக செலவு இல்லை, சமையல் அறையில் இருக்கிறது
கோடை காலத்திற்கு உகந்த பானம் என்றவுடன், தினம், தினம் இதை தயார் செய்வதற்கு மிகுந்த செலவு பிடிக்கும் என்று நீங்கள் கவலை கொள்ள வேண்டியதில்லை. குறிப்பாக, 4 அல்லது 5 மாதங்கள் வரை கோடை காலம் நீடித்தாலும் கூட, பெரிய செலவின்றி இந்த பானத்தை வைத்து அதை நீங்கள் எதிர்கொள்ள முடியும். வீட்டின் சமையல் அறையிலேயே இந்த பொக்கிஷம் ஒளிந்திருக்கிறது.
பெரும்பாலும், உணவு சாப்பிட்ட பிறகு, செரிமானத்திற்காக வெறும் வாயில் மென்று சாப்பிடக் கூடிய பெருஞ்சீரகத்தில் தான் கோடையை எதிர்கொள்ளும் சூட்சமம் அடங்கியுள்ளது. இயற்கையாக இது குளிர்ச்சி தரக் கூடிய வாசனை உணவுப் பொருள் ஆகும். இதனுடன், நீங்கள் சப்ஜா விதைகள் மற்றும் புதினா சேர்த்து அருந்தலாம்.
பெருஞ்சீரகத் தண்ணீர் தேர்வு ஏன்
சோம்பு என்று சொல்லக் கூடிய பெருஞ்சீரகத்தில் டயட்டரி ஃபைபர்ஸ், மினரல்கள் மற்றும் விட்டமின்கள் அடங்கியுள்ளன. பெருஞ்சீரக எண்ணெயில் இருந்து வெளியாகும் என்ஜைம்கள் உங்கள் உடலில் செரிமானத்தை அதிகரிக்கும், குடல் நலன் காக்கவும் உதவும். இது மட்டுமல்லாமல் இதில் மேங்கனீஸ், மேக்னீசியம் மற்றும் கால்சியம் சத்துக்கள் நிரம்பியுள்ளன. கண் பார்வை நலன் மற்றும் எலும்புகளை வலுவாக்க உதவிகரமாக இருக்கும்.
பெருஞ்சீரகத் தண்ணீர் தயாரிப்பது எப்படி
இரண்டு டேபிள்ஸ்பூன் பெருஞ்சீரகம் மற்றும் கால் கப் அளவு பனங்கற்கண்டு மற்றும் 4, 5 பாதம் பருப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இதைத் தொடர்ந்து ஒரு பெரிய ஜக் நிறைய குளிர்ந்த நீர் எடுத்து, அதில் இந்த கலவையை கலந்து கொள்ளவும், அதனுடன் எலுமிச்சை சாறு, ஒன்றிரண்டு புதினா இலை, கொஞ்சம் இந்துப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். இறுதியாக இதில் சப்ஜா விதைகள் சேர்த்து ஊற வைக்கவும். தேவைப்படும் சமயங்களில் இதை நீங்கள் அருந்திக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment