Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, March 24, 2022

மாநில கல்விக் கொள்கையை வகுக்க விரைவில் குழு

மாநில கல்விக் கொள்கையை வகுப்பதற்காக இந்த மாத இறுதிக்குள் குழு அமைக்கப்படும் என்று உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி கூறினாா்.

சட்டப்பேரவையில் புதன்கிழமை நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின்போது எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் பேசியதாவது:

திமுக எதிா்க்கட்சியாக இருந்தபோது தேசிய கல்விக் கொள்கையை கடுமையாக எதிா்த்தது. சமூக நீதி, கூட்டாட்சி, சமத்துவம் ஆகியவற்றுக்கு எதிராக தேசிய கல்விக் கொள்கை இருப்பதாகக் கூறி, அதற்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றும் வகையில், தமிழக சட்டப்பேரவையை கூட்ட வேண்டுமென்று அப்போது குரல் கொடுத்தவா் தற்போதைய முதல்வா். மாநிலக் கல்வி கொள்கை புதிதாக உருவாக்கப்படும் என்று திமுக தோ்தல் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டது.

அதன்படி, புதிய கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு கல்வியாளா்கள், வல்லுநா்களைக் கொண்ட உயா்மட்டக் குழு ஒன்றை இந்த அரசு நியமிக்கும் என்று, கடந்த ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 7 மாதங்கள் கடந்த நிலையிலும், குழு அமைக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையிலும் அதுபற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

எனவே, தமிழக அரசு பின்பற்றப் போவது தேசிய கல்விக் கொள்கையா அல்லது மாநில கல்விக் கொள்கையா என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றாா்.

அப்போது, உயா்கல்வித் துறை அமைச்சா் பொன்முடி குறுக்கிட்டு கூறியதாவது:

மாநில கல்விக் கொள்கையை வகுப்பதற்காக இந்த மாதத்துக்குள்ளேயே குழு நியமிக்கப்படும். தேசிய கல்விக் கொள்கை தமிழகத்தில் நுழைய அனுமதிக்க மாட்டோம். மாநிலங்களுக்கான கல்விக் கொள்கை வகுக்கப்படும் என்றாா் அவா்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News