Join THAMIZHKADAL WhatsApp Groups
கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் (யூடிஐஎஸ்இ பிளஸ்) அறிக்கையை மத்திய கல்வி அமைச்சகம் 2012-13 முதல் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.
இதில் நாடு முழுவதும் உள்ள 10.3 லட்சம் அரசுப் பள்ளிகள் உள்பட 15.1 லட்சம் பள்ளிகளின் கட்டமைப்பு, ஆசிரியர், பணியாளர்கள் உள்ளிட்ட பல விவரங்கள் தொகுக்கப்படுகின்றன.
பள்ளிகளில் முதல் வகுப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 2020-21இல் அதற்கு முந்தைய ஆண்டைவிட 18.8 லட்சமும், கே.ஜி. வகுப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 29.1 லட்சமும் குறைந்திருப்பதாக மத்திய கல்வி அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருப்பது கவலை அளிப்பதாக உள்ளது.
2020-21-இல், தொடக்க வகுப்பிலிருந்து மேல்நிலை வகுப்பு வரை 25.38 கோடி பேர் புதிதாக சேர்ந்திருக்கிறார்கள். இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 28.32 லட்சம் அதிகமாகும். எனினும், இவர்கள் யாரும் நேரடி வகுப்புகளில் பங்கேற்கவில்லை. ஆனால், ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல, கே.ஜி. மற்றும் முதல் வகுப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதுடன், சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய குழந்தைகளின் சேர்க்கை எண்ணிக்கையும் 3.6 சதவீதம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கரோனா தீநுண்மி பாதிப்பால் மாணவர் சேர்க்கை ஒத்திவைக்கப்பட்டதே இதற்கு காரணமாக இருக்கலாம் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
யுனெஸ்கோ அறிக்கையின்படி, உலகம் முழுவதும் சராசரியாக 35 வாரங்கள்தான் பள்ளிகள் முழுமையாகவோ பகுதியாகவோ மூடப்பட்டன. ஆனால், அமெரிக்காவில் 62 வாரங்களும், இந்தியாவில் 73 வாரங்களும் மூடப்பட்டன. சாதாரணமாக, எப்போதும் விடப்படும் விடுமுறைக்குப் பிறகே மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படுகிறது. இந்த நீண்ட விடுமுறையால் மாணவர்களின் கற்றல் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கரோனா காரணமாக, பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டதால், தனியார் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் படித்த 39.7 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். தனியார் பள்ளிகளில் இருந்து விலகி அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதை "அஸர் 2021' அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
2006 முதல் 2014 வரை தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்தே வந்துள்ளது. பின்னர், 2018 வரை ஒரே சீரான அளவில் இருந்துள்ளது. ஆனால், அதன் பின்னர் குறையத் தொடங்கியுள்ளது. ஆனால், இதற்கு நேர்மாறாக, 2006 முதல் குறையத் தொடங்கிய அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. கல்விக் கட்டணத்தை வசூலிக்க முடியாததால், சிறிய அளவிலான தனியார் பள்ளிகள் மூடப்பட்டதாலும் அரசுப் பள்ளிகளுக்கு மாணவர்கள் மாறியிருக்க வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா, மகாராஷ்டிரம், கேரளம், ஆந்திரம் போன்ற முன்னேறிய, பெரிய மாநிலங்களில்தான் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்திருக்கிறது. அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்திருந்தாலும், அந்த மாணவர்கள் அனைவருமே பள்ளிக்கு வருவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. கரோனாவுக்கு முன்பேகூட, உத்தர பிரதேசம், பிகார் போன்ற மாநிலங்களில் வருகைப் பதிவு 60 சதவீதத்துக்கும் குறைவாகவே இருந்துள்ளது.
இந்த மாணவர் சேர்க்கை அதிகரிப்பு மேலும் சில சிக்கல்களுக்கு வழிவகுத்துள்ளது. பல அரசுப் பள்ளிகளில் ஏற்கெனவே போதிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை. அதிகரித்த மாணவர் சேர்க்கைக்கு ஏற்ப கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் அளவுக்கு பொருளாதார நிலையும் தற்போது இல்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மாணவர்களுக்கு கற்பிக்கும் பணியிலும் ஆசிரியர்கள் கடும் சவாலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. உதாரணமாக, 2020 மார்ச்சில் பள்ளிகள் மூடப்பட்டபோது 2-ஆம் வகுப்பில் இருந்த குழந்தை, 2021-ஆம் ஆண்டு இறுதியில் பள்ளிகள் திறக்கப்பட்டபோது 4-ஆம் வகுப்பில் இருந்தது. இந்த ஒன்றரை ஆண்டுகளில் தனியார் பள்ளிகளாக இருந்தால் இணையவழியிலும், அரசுப் பள்ளிகளாக இருந்தால் தொலைக்காட்சியிலும்தான் பாடங்களைப் படித்திருப்பார்கள். அதில் எந்த அளவுக்கு மாணவர்களால் கவனம் செலுத்த முடிந்தது என்பது கேள்விக்குறியே.
கரோனா இல்லாத சமயத்திலேயே, 8-ஆம் வகுப்பு வரை "அனைவரும் தேர்ச்சி' (ஆல் பாஸ்) என்பதால், 5-ஆம் வகுப்பு மாணவர்களால் 2-ஆம் வகுப்பு பாடங்களைக்கூட சரியாகப் படிக்க முடிவதில்லை என்பதை பல ஆய்வுகள் சுட்டிக்காட்டி உள்ளன. மாணவர்களால் புரிந்துகொள்ள இயலாத நிலையில், அவர்களுக்குப் பாடம் நடத்துவது பெரும் சிரமமாக இருப்பதாக 65.4 சதவீத ஆசிரியர்கள் தெரிவித்துள்ளதை "அஸர் 2021' அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், நேரடி வகுப்புகள் இல்லாததால் இணையவழி வகுப்பும் தொலைக்காட்சி வகுப்பும் மாணவர்களின் இயல்பு வாழ்க்கையையே தடம்புரளச் செய்துள்ளன. நேரத்துக்கு சாப்பிடாதது, தினசரி குளிக்காதது, படிப்பில் கவனம் குவிக்க முடியாதது, செல்லிடப்பேசியிலேயே மூழ்கிக் கிடப்பது, இணையவழியிலேயே தேர்வு என்பதால் பார்த்தே எழுதுவது உள்ளிட்டவை பெரும்பாலான மாணவர்களின் இயல்பாகவே மாறிவிட்டன.
அரசு சரியாகத் திட்டமிடுவதுடன், ஆசிரியர் - பெற்றோர் - மாணவர் சமூகம் இணைந்து செயல்பட்டால்தான் மாணவ சமுதாயம் எதிர்கொள்ளும் இந்த எல்லா குறைகளையும் சரிசெய்ய இயலும்!
No comments:
Post a Comment