சொத்து வரி உயர்வை தொடர்ந்து காலி மனைகளுக்கான வரியையும் 100% உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகளில் 25% முதல் 150% வரை சொத்துவரியை தமிழக அரசு உயர்த்தியது. அதன்படி சென்னை மாநகராட்சியின் பிரதானப் பகுதிகளில் 600 சதுர அடிக்கு குறைவான குடியிருப்புக் கட்டடங்களுக்கு 50 சதவிகிதமும், 600 - 1,200 சதுர அடி வரையுள்ள குடியிருப்புகளுக்கு 75சதவிகிதமும்,1,201 - 1,800 சதுர அடி வரையுள்ள குடியிருப்புகளுக்கு 100சதவிகிதமும்,1,801 சதுர அடிக்கு மேல் உள்ள குடியிருப்புகளுக்கு 150சதவிகிதமும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்த சூழலில் தமிழகத்தில் காலிமனை மீதான வரிவிதிப்பையும் தமிழக அரசு 100% வரை உயர்த்தியுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்களுக்கு நகராட்சி நிர்வாக இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கையில், "சொத்துவரி சீராய்வுப் பணிகள் முடிந்து, வழக்கமான வரிவிதிப்புகளை மேற்கொள்ள 3 மாத காலம் அவகாசம் தேவைப்படும். அதுவரை புதிதாக பெறப்படும் காலிமனை வரிவிதிக்கக் கோரும், விண்ணப்பங்களை உரிய விதிகளைப் பின்பற்றி பரிசீலனை செய்து ரசீதுகளை வைப்பு ரசீதுகளாக தற்காலிகமாக வழங்கலாம் . சீராய்வுப் பணிகள் முடிவடைந்தவுடன், புதிய வரி விகிதங்களின்படி வரிவிதிப்பு செய்தல் வேண்டும். ஏற்கனவே பெறப்பட்ட வைப்புத் தொகையை ஈடுசெய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் கட்டட விண்ணப்ப நடைமுறை தடையின்றி செயல்பட மென்பொருளில் தேவையான மாற்றங்களை செய்வதற்கு கணினி ஆராய்வாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment