Join THAMIZHKADAL WhatsApp Groups
பள்ளிக்கள்வித்துறையின் பல திட்டமிடல்கள் உள்ளபடியே மகிழ்வைத் தந்தாலும் சில விடயங்கள் சங்கடங்களையும் சிரமங்களையும் நல்குகின்றன என்பதை மறுப்பதற்கில்லை
உச்ச மதிப்பெண் முறை ஒழிக்கப்பட்டது எனப் பெருமை கொண்ட வேளையில் இன்னமும் மதிப்பெண்ணை மையப்படுத்தியே மாவட்ட தரங்கள் நிர்ணயிக்கப் படுகின்றன.
இருப்பது 38 மாவட்டம் என்றாலும் மாநில சதவீத சராசரிக்குக் கீழ் பெறுகிற அத்துணை மாவட்டங்களும் கல்வி அடைவில் பின்தங்கியதாகவே கருதப்படுகின்றன.
அந்த இலக்கை மாற்ற பல்வேறு முயற்சிகள் பல கட்டங்களாக மாவட்ட அளவில் நடத்தப்படுகின்றன.
நிறைய புதுமைகளும் சிந்தனைகளும் அலுவலர் தொடங்கி ஆசிரியர் வரை இருந்தாலும் அதை வெற்றியாக்க வேண்டிய கடமை வீரன் இங்கு மாணவனே.
பல்வேறு பணிகளால் பணிக்கப்பட்ட ஆசிரியர்கள் மாணவன் தேர்ச்சி என்ற நிலையிலிருந்து தற்போது சதவீத தேர்ச்சி என்ற இலக்கை கையிலெடுக்க வேண்டிய கட்டாயச் சூழலில் உள்ளனர்.
சில மாணவர்கள் பள்ளிக்கு வருகின்ற விதம் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. எவ்வித எதிர்கால இலக்குமற்றும், சொல்வதை தனக்குள் ஏற்றிக் கொள்கிற மனமுமற்றும் பள்ளி வருகின்றனர். சாதாரணமாக சொல்ல இயலும் அப்படி திறனற்ற மாணவனை திறனுள்ளவனாக்குபவரே சிறந்த ஆசிரியர், அதுதான் உமக்களிக்கப்பட்ட பணி என்று.
ஆனால் களச்சூழல் பள்ளிக்குப் பள்ளி ஊருக்கு ஊர் இடத்திற்கு இடம் வேறுபடும் கற்றல் கற்பித்தல் முறையும் கூட. ஒரே நாடு ஒரே கற்பித்தல் என்பது இங்கு துளியும் பொருந்தாது.
சில இடங்களில் அவனுக்கு கல்வியைக் காட்டிலும் நல்லொழுக்கமுடையவனாக வார்க்க வேண்டிய தார்மீகப் பணியை ஆசிரியர்கள் சுமக்க வேண்டிய நிலையும் உண்டு.
கற்றல் என்பது பள்ளியோடோ சிறப்பு வகுப்புகளோடோ முடிவதுமில்லை. சமூகச் சூழல் ஒப்பார்குழுச் சூழல் இல்லச்சூழல் என யாவின்வழியும் பிரதிபலிக்கின்ற ஒன்று.
பல இடங்களில் உடை மற்றும் சிகை அலங்காரங்களுக்கே அதை சீராக்கவே பாதி பள்ளி நேரம் வீணாகிறது. அதுமட்டுமல்லாது மாணவர் பாதுகாப்பு பிரதானமாய் நிற்கிறது. இவ்வாறு வைக்கப்படும் சிறப்பு வகுப்புகளில் மாணவர் வருகையை உறுதிப்படுத்துவதே பெரும்பாடாய் உள்ளது.
இன்றைய காட்சி ஊடக தாக்கத்தால் பிணைக்கப்பட்ட மாணவர் சமூகம் இப்போது தான் மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. ஈராண்டு கற்றல் இடைவெளியின் தாக்கம் குறைய மறைய இன்னும் கூடுதலால் ஈராண்டும் ஆகலாம்.
அதிலிருந்தெல்லாம் அம்மாணவனை மீட்டும் பாதுகாத்தும் தேர்ச்சியடைய வைப்பதும் சதவீத மதிப்பெண்ணை உயர்த்தும் இலக்கும் உள்ளபடிய எதிர்ப்பார்த்த அடைவினைத் தருமா என்பதும் ஐயமே?
எது எப்படி இருப்பினும் அதிகாரிகள் ஆலோசனையை புறந்தள்ளும் நிலையில் இன்று ஆசிரியர்கள் யாரும் இல்லை. எதிர்க்கருத்துகள் இருப்பினும் கூட மாணவர் நலன் என்ற ஒற்றைப் பதாகையின்கீழ் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர்.
மாணவர் மன இறுக்கம் போக்க கலைத்திருவிழா விளையட்டுப் போட்டிகள் என பிரமாதிக்கப்பட்டு கொண்டாடினோம். அந்த வகையில் கற்பிக்கும் ஆசிரியர்கள் மன இறுக்கத்திற்கும் மருந்தளிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமே.
அச்சமற்ற பணிச்சூழல், கண்காணிப்பற்ற கற்பிக்கும் சுதந்திரம், இவைகளே நல்ல கற்றல் விளைவுகளை உருவாக்கும். சுவர் இருந்தால் தானே சித்திரம். அது கரடுமுரடாயின் கிறுக்கல்களே மிகும்.
ஆங்கிலத்தில் சொல்வார்கள் No two watches agree என்று அது போல தான் ஆசிரியர்களும். கற்பித்தல் என்பது உள்ளார்ந்த திறன் சார்ந்தது. வரையறுக்கப்பட்ட கட்டமைப்பு சார்ந்ததல்ல. எனவே சிறப்பு வகுப்புகளும் ஆசிரியரின் சுதந்திர எல்லையில் நிற்குமெனில் தன்னார்வ கற்பித்தல் முகிழ்க்கும். இல்லையேல் அது இன்னுமோர் சடங்காய் கல்வித்துறையில் பயணிக்கும்.
-விவாதிக்கலாம்.
நன்றி🙏🙏🙏🙏
சீனி.தனஞ்செழியன்
No comments:
Post a Comment