Join THAMIZHKADAL WhatsApp Groups
கொரோனா தொற்றுக்குப் பின் மாரடைப்பு என்பது இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பொதுவான மற்றும் சாதாரண விஷயமாக மாறிவிட்டது.
அப்படி வரும் மாரடைப்புகள் பெரும்பாலும் அதிகாலையில்தான் வருகிறது. இதற்கு என்ன காரணம்..? வாழ்க்கை முறை மாற்றங்களுக்கும் இதற்கும் தொடர்பு உண்டா..?
இதயம் எப்போதும் அமைதியை விரும்பும் உறுப்பு. அதை அமைதியாக செயல்பட விட்டால்தான் நம் உடலின் அனைத்து உறுப்புகளும் சீராக இயங்க முடியும். அதேபோல் நம் வாழ்நாள் முழுவதும் நிற்காமல் உழைக்கும் இதயத்தின் ஆரோக்கியத்தை பராமரிப்பது பற்றி யாருமே சிந்திப்பதில்லை என்கிறார் இதய நோய் நிபுணர் சொக்கலிங்கம்.
ஒரு நிமிடத்திற்கு 72 முறை துடிக்கும் இதயம் ஒரு நாளைக்கு லட்சம் முறை துடிக்கிறது. இதற்கு தேவையற்ற அழுத்தங்கள் கொடுக்கும்போது இதய பாதிப்புகள் சீக்கிரமே உண்டாகின்றன. அப்படி இந்தியாவில் மட்டும் ஆண், பெண் பாரபட்சமின்றி ஒரு மணி நேரத்திற்கு 90 பேர் இறப்பதாக மருத்துவர் சொக்கலிங்கம் குறிப்பிடுகிறார்.
மாரடைப்பு வருவதற்கு இரத்தக்குழாயில் ஏற்படக்கூடிய அடைப்புதான் காரணம். அதேபோல் இதயத்திற்கு இரத்தத்தில் இருக்கக் கூடிய கொலஸ்ட்ரால் என்பது மிக மிக அவசியம். ஆனால் பலரும் அதுதான் இதய நோய்களுக்கு காரணம் என நினைத்து கொழுப்புச்சத்தை முழுமையாக தவிர்க்க நினைக்கின்றனர். ஆனால் கொழுப்புச் சத்து இல்லை எனில் மனிதன் உயிர் வாழவே முடியாது என்கிறார் மருத்துவர் சொக்கலிங்கம்.
கொழுப்பு காரணம் இல்லை எனில் மாரடைப்பு எப்படி ஏற்படுகிறது..?
மாரடைப்பு வருவதற்கு போட்டி, பொறாமை போன்ற எதிர்மறை எண்ணங்கள் அதிகமாக வரும்போது அட்ரினலின் (Adrenaline) வேகமாக சுரக்கிறது. இது இரத்தத்தில் உள்ள கொழுப்பை பிரித்து இரத்தக்குழாயில் படிய வைக்கிறது. இவ்வாறும் படியும் கொழுப்பின் அறிகுறிகள் தென்பட 20 முதல் 30 வருடங்கள் வரை ஆகும். அதனால்தான் வயதான காலத்தில் இரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு உண்டாகிறது. இப்படி கொழுப்பு இரத்தக் குழாயில் படிய 100 சதவீதம் எதிர்மறை எண்ணங்களே காரணம் என்கிறார். இவ்வாறு படியும் கொழுப்புகளுக்கு பெருந்தமனி தடிப்பு (atherosclerosis) என்று பெயர்.
20- 30 வயதில் மாரடைப்பு வர என்ன காரணம்..?
தேவையற்ற கவலை, மனச்சோர்பு, மனப்பதற்றம், மன அழுத்தம் போன்றவை இளம் வயதிலேயே அதிகமாக உண்டாகிறது. இதன் காரணமாக இரத்தக் குழாயில் உள்ள எண்டோசீலியம் என்னும் கோட்டில் சின்ன கீரல் அல்லது ரணம் உண்டாகிறது. இதனால் இரத்த ஓட்டம் குறைந்து உறைந்துபோகிறது. அப்போது இதயத்திற்கு செல்ல வேண்டிய இரத்தம் தடைபடுகிறது. இதனாலேயே மாரடைப்பு ஏற்படுகிறது என்கிறார் மருத்துவர் சொக்கலிங்கம்.
எனவே மாரடைப்பு உண்டாக மூன்று காரணங்கள் :
- இரத்தக் குழாய் அடைபடுதல்
- இரத்தம் உறைதல்
- இரத்தக்குழாய் சுருங்குதல்
இந்த மூன்று பாதிப்புகளும் ஏற்பட அட்ரினலின் சுரப்பு அதிகரிப்பதே காரணம் என்கிறார்.
இந்த மாரடைப்பு பெரும்பாலும் அதிகாலையில் வர என்ன காரணம்..?
பெரும்பாலும் மாரடைப்பு 5-8 மணிக்குள் அதுவும் திங்கள் கிழமைகளில்தான் அதிகமாக ஏற்படுகிறது. இதற்கு காரணம் திங்கள் முதல் வெள்ளி வரை அதிக வேலை பளு காரணமாக பரபரப்பாக செயல்படுகிறோம். பின் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மகிழ்ச்சியாக கழிக்கிறோம். பின் ஞாயிறு இரவில் வெளியே செல்வது அல்லது வீட்டிலேயே கூட 11 மணிக்கு மேல் லேட்டாக சாப்பிடுவது, உடனே செரிமானிக்காத உணவுகளை அதிகமாக உட்கொள்வது, பின் சாப்பிட்ட உடனே 11.30 அல்லது 12 மணிக்கு தூங்கச் செல்கிறார்கள்.
இப்படி வயிற்றில் அதிக உணவுடன் உடனே உறங்கச் செல்வது தூக்கத்தை தடை செய்யும். நிம்மதியான தூக்கம் இருக்காது. அதோடு கூடவே மறுநாள் திங்கள் கிழமை என்பதால் மீண்டும் வேலைக்கு செல்ல வேண்டும் என்கிற பதற்றம் அதிகரிக்கிறது. இந்த சமயத்தில் அட்ரினலின் சுரப்பு அதிகரிக்கும். தூக்கத்தில் கெட்ட கனவு வந்தால் கூட அட்ரினலின் சுரக்கும் என்கிறார் சொக்கலிங்கம்.
பின் காலையில் திங்கள் கிழமை என்கிற பதற்றத்திலேயே எழுந்திருக்கும்போது அட்ரினலின் சுரப்பு அளவுக்கு அதிகமாகி இரத்தக் குழாயில் கீரல் ஏற்படுகிறது. இதனால் இரத்த குழாய் வெடித்து மாரடைப்பு உண்டாகிறது என்கிறார். அதுவரை உங்களுக்கு இரத்த குழாய் அடைப்பு இல்லை என்றாலும் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்கிறார்.
இது காலையில் எழும்போது மட்டுமல்ல இளம் வயதிலேயே வரக்கூடிய ஏமாற்றம் , பயம், வேலையில் அழுத்தம், டார்கெட்டுகள், காதல் தோல்வி என இவை அனைத்துமே எந்த நேரத்திலும் அட்ரினலின் சுரப்பை அதிகரிக்கலாம். அவை மாரடைப்பை உண்டாக்கலாம் என்கிறார் மருத்துவர் சொக்கலிங்கம்.
தடுக்க என்ன செய்ய வேண்டும்..?
- உணர்வுகளை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்.
- சீரான உணவை உட்கொள்ள வேண்டும்.
- அளவான உடற்பயிச்சி செய்ய வேண்டும்.
இந்த மூன்றையும் சரியாக பின்பற்றி வந்தால் இதய பாதிப்புகள் , மாரடைப்பு வருவதை தடுக்கலாம் என்கிறார்.
எனவே கோபம், போட்டி , பொறாமை, போன்ற எதிர்மறை எண்ணங்கள், கவலைகளை தவிர்த்து அமைதியான வாழ்வை வாழ முற்படுங்கள்.
ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை பின்பற்றுங்கள்.
தினசரி குறைந்தது அரை மணி நேரமாவது உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள் என்கிறார்.
இவ்வாறு செய்வதால் 95 % மாரடைப்பு அபாயத்தை தடுக்க முடியும். அதேசமயம் உங்களுக்கு மரபணு காரணமாக இதய பாதிப்புகள் வர நேர்ந்தாலும் அதை மாற்ற முடியும் என்கிறார் இதய நோய் நிபுணர் மருத்துவர் சொக்கலிங்கம்.
No comments:
Post a Comment