Join THAMIZHKADAL WhatsApp Groups
தொற்று கிருமிகளால் உண்டாகும் ஆசனவாய் கட்டி மற்றும் பவுத்திர நிலையில் நல்லதொரு தீர்வை இயற்கையான முறையில் நாட நினைக்கும் பலருக்கும் உதவும் வகையில் பல சித்த மருத்துவ மூலிகைகள் கூறப்பட்டுள்ளன.
குடல் சார்ந்த உபாதைகளில் முக்கிய இடத்தைப் பிடிப்பது ஆசனவாய் சார்ந்த நோய்கள் தான். ஏனெனில் இயல்பான செயல்களை கூட செய்ய முடியாமல், சொல்லப் போனால் நிம்மதியாக உட்கார கூட முடியாமல் பாதிக்கப் பட்டவர்களை அதிகம் துன்புறுத்தும் நோய் நிலை ஆசனவாய் சார்ந்த நோய்கள். அவற்றில் முக்கிய இடத்தை பிடிப்பவை மூலம், பவுத்திரம், ஆசன வெடிப்பு இவை மூன்றும் தான். எவ்வளவு தான் சிகிச்சை அளித்தாலும் மீண்டும் மீண்டும் உண்டாகி துன்புறுத்தும் தன்மை மிகவும் வருத்தமளிக்கும் ஒன்று. மேற்கூறிய மூன்றும் வெவ்வேறு நோய்நிலையையும், குறிகுணங்களையும் கொண்டிருப்பதாக இருந்தாலும் மூன்றுமே ஆசன வாய் சார்ந்த குறிகுணங்கள் என்பதால் ஒன்று போல காணப்படும். ஆக முதலில் பவுத்திரம் நிலையில் இருந்து மூலம், மற்றும் ஆசன வெடிப்பினை வேறுபடுத்தி நோய்க்கணிப்பை உறுதி செய்வது அவசியம். சர்க்கரை வியாதி, உடல் பருமன் போன்ற நோய்நிலைகளினால் உண்டாகும் ஆசனவாய் பகுதியை சுற்றிய கட்டியானது நாளடைவில் பவுத்திரமாக மாறக்கூடும். அதாவது கட்டியில் இருந்து தனியே ஒரு பாதையை உண்டாக்கி சிறு சிறு துவாரங்களை உடைய புரையோடிய புண்ணாக மாறி வலி, எரிச்சல், நமைச்சல், ஆசனவாய் பகுதி சுற்றிலும் வீக்கம், துர்நாற்றமுள்ள நீர் போன்ற திரவம் கசிந்து உள்ளாடைகளில் படிதல் போன்ற குறிகுணங்களை உண்டாக்கி மனக்கவலையை உண்டாக்கும். இத்தகைய ஆசனவாய் கட்டிகள், பவுத்திரம் போன்ற நோய்நிலைகளுக்கு எலும்புருக்கி நோய், பால்வினை நோய்கள் போன்ற கிருமி தொற்றுக்கள் காரணமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றை கண்டறிந்து வேறுபடுத்தி முறையான சிகிச்சை அளிப்பது நல்லது. சிலருக்கு சாதாரண அறுவை சிகிச்சையே செய்தாலும் மீண்டும் மீண்டும் கட்டி உண்டாகி அதிக துன்பத்தில் ஆழ்த்தும். தொற்று கிருமிகளால் உண்டாகும் ஆசனவாய் கட்டி மற்றும் பவுத்திர நிலையில் நல்லதொரு தீர்வை இயற்கையான முறையில் நாட நினைக்கும் பலருக்கும் உதவும் வகையில் பல சித்த மருத்துவ மூலிகைகள் கூறப்பட்டுள்ளன.
அதில் எளிமையாக அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் உள்ள சிறப்பு மிக்க சித்த மருத்துவ மூலிகை தான் 'அரிமஞ்சரி' எனும் 'குப்பைமேனி'. இதன் பெயர்காரணத்தை சற்றே ஆராய்ந்தால் 'அரி' என்றால் அழகு, 'மஞ்சரி' என்பது தளிர். அதாவது குப்பை உணவுகளை உண்டு, நச்சு தன்மை மிக்க குப்பை போன்று கெட்டுபோன உடம்பை, அழகு மிக்க ஆரோக்கியமான உடலாக மாற்றும் மூலிகை என்பதால் 'அரிமஞ்சரி' என்ற பெயர் வந்ததாக தெரிகிறது. இதே பொருள் தான் குப்பைமேனி என்ற பெயருக்கும் பொருந்தும்.
மொத்தத்தில் குப்பைமேனி மூலிகையானது எளிமையாக குப்பையில் கிடைக்கும் மரகதப்பச்சை அளவுக்கு மகத்துவம் உள்ள மருத்துவ மூலிகை எனலாம். கைப்பு சுவையும், கார்ப்பு சுவையும் உடைய குப்பைமேனி மூலிகை வெப்ப தன்மையை கொண்டது என்கிறது சித்த மருத்துவம். எனவே கபத்தை நீக்கும் பல்வேறு மருந்துகளிலும், மருத்துவ முறைகளிலும் குப்பைமேனி பயன்படுத்தப்படுகின்றது. இன்றும் குப்பைமேனி பல கிராமங்களில் வீட்டு வைத்தியமாக பல்வேறு நோய்நிலைகளில் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு நாடுகளின் பாரம்பரிய மருத்துவத்தில் குப்பைமேனி தோல் நோய் சிகிச்சையில் பயன்படுத்தி பலன் காணப்படுகிறது. இதன் இலையுடன் உப்பு சேர்த்து உடலில் தேய்த்து குளிக்க தோலில் உண்டாகும் நமைச்சல், சொறி, சிரங்கு நீங்கும். புண் ஆற்றும் மருத்துவ மூலிகையாகவும் அதிகம் பயன்படுகிறது. இதன் இலையில் உள்ள வேதிப்பொருட்களால் கிராம் பாசிட்டிவ் மற்றும் நெகடிவ் பாக்டீரியாக்கள் வளர்ச்சி சிதைவதால் நுண்ணுயிர்க்கொல்லியாக உதவுகிறது.
ஆஸ்துமா, வீசிங், மூச்சுக்குழல் அழற்சி ஆகிய நோய்நிலைகளுக்காக பல நாடுகளின் பாரம்பரிய மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ளது. குப்பைமேனி இலையில் மருத்துவ குணமுள்ள ஸ்டீராய்டுகள், ட்ரைடெர்பீனாய்டுகள், கிளைகோசைடுகள், கார்போஹைட்ரேட்டுகள், அல்கலாய்டுகள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் டானின்கள் உள்ளன. தாவரத்தின் செயலியல் மூலப்பொருட்களில் சயனோஜெனிக் கிளைகோசைடுகள் அகாலிபின், எலாஜிக் அமிலம் ஆகியவை முக்கிய பங்காற்றுகின்றன. குப்பைமேனி அதில் உள்ள வேதிப்பொருட்களால் பல மருத்துவக் குணங்களை பெற்றுள்ளது.
இது உடலில் உள்ள புழுக்களை கொல்வதாகவும், வீக்கங்களை குறைப்பதாகவும், பாக்டீரியாக்களை எதிர்க்கும் திறன் உடையதாகவும், ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் குறைப்பதாகவும், உடல் பருமனை தடுப்பதாகவும், பூச்சிக்கடி மற்றும் நஞ்சுகளை குறைப்பதாகவும், கல்லீரலை பாதுகாப்பதாகவும், காயத்தை குணப்படுத்துவதாகவும் உள்ளதாக முதல் நிலை நவீன ஆய்வுகள் பல சுட்டிக்காட்டுகின்றன. குப்பைமேனி இலையுடன், கற்பூரவள்ளி, கரிசாலை சேர்த்து இடித்து சாறெடுத்து குழந்தைகளுக்கு காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவிற்கு கொடுக்க மார்பில் தங்கிய கோழை, கபம் வெளியப்படும். கோழையகற்றியாக செயல்படக்கூடியது. குப்பைமேனி இலையை அரைத்து புண்களுக்கு பூச விரைவில் புண் ஆறும்.
மூல நோயில் ரத்தம் கொட்டுவதை நிறுத்த குப்பைமேனியுடன், சீரகம் சேர்த்து பயன்படுத்த நல்ல பலன் தரும். கால் அரை இடுக்குகளில் உண்டாகும் பூஞ்சை தொற்றினை நீக்கும் தன்மையும் இதற்குண்டு. குப்பைமேனி இலையுடன், ஆமணக்கு எண்ணெய் சேர்த்து காய்ச்சி செய்யப்படும் 'மேனி தைலம்' எனும் சித்த மருந்து மிகப் பிரபலமானது. தினசரி ஒன்று முதல் இரண்டு தேக்கரண்டி வீதம் இருவேளை எடுத்துக்கொள்ள வயிற்றில் உள்ள புழுக்கள் சாகும். மலச்சிக்கல் தீரும். மேலும் ஆசன வாயை சுற்றியுள்ள கட்டிகள் கரையும். ஆசனவாய் நோய்க்கு காரணமாகும் கிருமிகளைக் கொல்லும். இது பவுத்திரம் நோய்நிலையில் நல்ல பலன் தரும்.
இதை மூட்டுவாத நோய்களுக்கு மேற்பூச்சாகவும் பயன்படுத்த நன்மை தரும். எளிமையாக கிடைப்பதால் என்னவோ, குப்பைமேனி கேட்பாரற்று குப்பையில் உள்ளது. குப்பைமேனிக்கு மட்டும் இந்த நிலைமை அல்ல. இன்னும் பல நூற்றுக்கணக்கான எளிய மூலிகைகளும் பயன்படுத்தப்படாமல் வெறும் காட்சிப்பொருளாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அத்தகைய மூலிகைகளை அறிந்துகொண்டு பயன்படுத்த துவங்குவது நலம் பயக்கும். அந்த வகையில், குப்பைமேனியைப் பயன்படுத்த துவங்கினால் நமது உடல் சுத்தமடைந்து ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும்.
No comments:
Post a Comment