Join THAMIZHKADAL WhatsApp Groups
பள்ளி ஆசிரியர்களின் கூடுதல் கல்வித் தகுதிக்கு ஊக்கத் தொகை தவறாக கணக்கிடப்பட்டு, மோசடியாக பெறப்பட்டிருந்தால் அதை வசூலிக்க வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
தென் மாவட்டங்களை சேர்ந்த சில பள்ளி ஆசிரியர்களுக்கு கூடுதல் கல்வித் தகுதிக்குரிய ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. அவர்கள் ஒரே கல்வியாண்டில் ஒரே நேரத்தில் பட்டம் பெற்றதால் ஊக்கத்தொகை வழங்க முடியாது எனக்கூறி தொகையை வசூலிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. அதை எதிர்த்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர்.
நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.
மனுதாரர்கள் தரப்பு: மனுதாரர்கள் பள்ளிக் கல்வித்துறையிடம் முன் அனுமதி பெற்றனர். பின் கூடுதல் தகுதிக்கான பட்டங்களை அங்கீகரிக்கப்பட்ட பல்கலையிலிருந்து பெற்றுள்ளனர். உரிய ஆய்விற்கு பின் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. மனுதாரர்களுக்கு விளக்கமளிக்க வாய்ப்பளிக்கவில்லை.
தமிழக அரசு தரப்பு: மனுதாரர்கள் ஒரே கல்வியாண்டில் ஒரே நேரத்தில் பட்டங்களைப் பெற்றுள்ளனர். ஊக்கத் தொகை பெற தகுதி இல்லை. அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக தணிக்கையில் தெரியவந்ததால், தொகையை வசூலிக்க உத்தரவிடப்பட்டது.
மனுதாரர்கள் சில அதிகாரிகளின் துணையுடன் தவறாக அல்லது மோசடியாக ஊக்கத் தொகையை பெற்றுள்ளனர். அதை திரும்பப் பெற உத்தரவிடப்பட்டது.
நீதிபதி: எந்தவொரு ஆசிரியருக்கும் ஊக்கத் தொகையை தவறான முறையில் வழங்குவது தொடர்வதை அனுமதிக்க முடியாது. ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவதன் மூலம் மாணவர்களின் செயல்திறனில் எந்த மேம்பாடும் ஏற்படவில்லை என்பதை அரசு தற்போது உணர்ந்துள்ளது. தகுதியின் அடிப்படையில் மட்டும் எதிர்காலத்தில் ஊக்கத் தொகையை வழங்குவதில்லை என்ற கொள்கை முடிவை அரசு தற்போது எடுத்துள்ளது. தகுதியின் அடிப்படையில் ஏற்கனவே ஊக்கத் தொகை பெற்று வரும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவை வழங்குவதில் எவ்வாறு மாறுபடுகிறார்கள் என்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும்.
ஊக்கத் தொகை உயர்வு பெற மனுதாரர்களுக்கு உரிமை இல்லை என இந்நீதிமன்றம் கருதுகிறது. இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு மேல் ஊக்கத் தொகை வழங்கப்பட்டதை கருத்தில் கொண்டு இந்நீதிமன்றம் கீழ்க்கண்ட வழிகாட்டுதல்களை பிறப்பிக்கிறது.
ஊக்கத் தொகை தவறாக கணக்கிடப்பட்டு பெறப்பட்டிருந்தால், அதை திரும்பப் பெற வேண்டும். அதிகாரிகளின் துணையுடன் மோசடியாக ஊக்கத் தொகை பெறப்பட்டிருந்தால், அதை வசூலிக்க வேண்டும். தகுதியற்றவர்களாக கண்டறியப்பட்டால் தொகையை எதிர்காலத்தில் திரும்பப் பெறலாம் என மனுதாரர்கள் உத்தரவாதம் அளித்திருந்தால் அதன்படி வசூலிக்கலாம். இந்த வகைகளுக்குள் மனுதாரர்கள் வரவில்லை எனில் அவர்களுக்கு எதிராக தொகையை திரும்பப் பெற வேண்டிய நடவடிக்கையை மேற்கொள்ளத் தேவையில்லை.
மனுதாரர்கள் தெரிந்தோ, தெரியாமலோ 5 ஆண்டுகளுக்கு மேல் ஊக்கத் தொகை பெற அனுமதித்திருந்தால், அதற்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூடுதல் தகுதிக்கான ஊக்கத் தொகை பெறும் ஆசிரியர்களை பொறுத்த வரையில், அவர்கள் கூடுதல் தகுதி இல்லாதவர்களைவிட சிறப்பாகச் செயல்படுகிறார்களா என்பதையும், ஊக்கத் தொகையையும் அவ்வப்போது ஆய்வு செய்யப்படுவதை அரசு உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment