Join THAMIZHKADAL WhatsApp Groups
ஒரு குறிப்பிட்ட இடத்தை சேர்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு புவிசார் குறியீட்டை மத்திய அரசு வழங்கி வருகிறது.
1999ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட புவிசார் குறியீட்டு சட்டம் 2003 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது. புவிசார் குறியீடு வழங்கியதன் மூலம் சம்பந்தப்பட்ட பொருளை வேறு யாரும் வியாபார நோக்கத்துக்காகவோ போலியாகவோ பயன்படுத்துவதை தடுக்க முடியும். இதுபோல தமிழ்நாட்டில் பல பொருட்களுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் விளையும் குண்டு மிளகாய்க்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், முதுகுளத்தூர், கடலாடி மற்றும் கமுதி பகுதிகளில் 200 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியான குண்டு மிளகாய் சாகுபடி செய்து வருகின்றனர். அதன் செழுமையான சுவை நறுமணத்திற்காக அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
காரத்தன்மை அதிகம் கொண்ட குண்டு மிளகாய் சாகுபடியில் ராமநாதபுரம் மாவட்டம் தமிழகத்தில் முதலிடத்தில் இருப்பதால் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு வழங்கவேண்டும் என்பது அம்மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 45 ஆயிரம் ஏக்கரில் குண்டு மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தில் மிக அதிகளவிலும், பக்கத்து மாவட்டங்களான சிவகங்கை, துாத்துக்குடி, விருதுநகரில் குண்டு மிளகாய் சாகுபடியாகிறது. 'ராமநாடு முண்டு' எனப்படும் குண்டு மிளகாய் சாகுபடியில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சம் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இங்கிருந்து கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களுக்கு அதிகளவு செல்கிறது. கத்தார், ஓமன், துபாய், சவுதி அரேபியா, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. குண்டுமிளகாயில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சத்துக்கள் உள்ளன. குண்டுமிளகாய் பொடி உணவு பயன்பாட்டிற்கும், மிளகாய் எண்ணெய் தயாரித்து மருத்துவத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.
முக்கியத்துவம் வாய்ந்த இராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து வந்த நிலையில், தற்போது புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த அங்கீகாரத்தால் குண்டு மிளகாய் சாகுபடி அதிகரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி அதிகரிக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment