Join THAMIZHKADAL WhatsApp Groups
எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யாத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.
தற்போது பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு ஏப்ரல் 6-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. பொதுத்தேர்வுகள் முடிவடைந்ததும் மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தொடங்கும். இந்நிலையில், விடைத்தாளை திருத்தும் பணியில் ஈடுபடும் முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வு அலுவலர்கள், உதவி தேர்வாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
அதில் உள்ள முக்கிய அம்சங்கள்:
> முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வு அலுவலர்கள் மதிப்பீடு செய்த விடைத்தாள்களிலேயே மதிப்பெண்களில் அதிக வேறுபாடுகள், மறுகூட்டல், மறுமதிப்பீடுகளின் போது கண்டறியப்பட்டு, தேர்வர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிகழ்வுகள் ஏற்படுகின்றன. அவற்றை தவிர்க்கும் வகையில், மதிப்பீடு செய்யும் போது மிகவும் கவனமுடனும், விழிப்புடனும் செயல்பட வேண்டும்.
> மாணவர்கள் விடைத்தாளில் நடுவில் 2 பக்கங்களில் எழுதாமல் விட்டு, அடுத்து வரும் தாளில் எழுதியிருந்தால், அதனை மதிப்பீடு செய்யாத நிகழ்வும் நேரிடுகிறது. இதன்மூலம், முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வு அலுவலர் தங்கள் பணியை சரிவர கவனிக்கவில்லை என்பது தெரிய வருகிறது.
> உதவி தேர்வாளர்களால் விடைக்குறிப்பின்படி, மதிப்பீடு செய்து உரிய மதிப்பெண் வழங்கப்பட்ட பின்னர், முதன்மை கண்காணிப்பாளர், கூர்ந்தாய்வு அலுவலர் மீளச் சரிபார்க்கும் போது கவனக்குறைவால் அதிகபட்ச மதிப்பெண்களை விட கூடுதலாக வழங்கியது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தெரிய வந்தது. இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும். அவ்வாறு ஏற்படும் தவறுகளுக்கு முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வு அலுவலர்கள், உதவி தேர்வாளர்கள் மீது உரிய நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்படும்.
> விடைத்தாள் மதிப்பீட்டு பணியின்போது தேவையின்றி பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதேபோல் செல்போனை விடைத்தாள் திருத்தும் அறையில் எக்காரணத்தை கொண்டும் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தியது கண்டறியப்பட்டால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
> மதிப்பீடு செய்ததில் அதிகளவில் வேறுபாடுகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். பொதுவான கூட்டல் பிழை இருந்தால், கூர்ந்தாய்வு அலுவலர் முழு பொறுப் பேற்க வேண்டும். மேற்கண்ட அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
No comments:
Post a Comment