Join THAMIZHKADAL WhatsApp Groups
பிளஸ் 2 ஆங்கிலப் பாடத்தேர்வில் 50 ஆயிரம் மாணவ, மாணவியர் நேற்று தேர்வு எழுத வரவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தேர்வு பயம், மற்றும் உடல்நிலை சரியின்மை காரணமாக பல மாணவர்கள் பள்ளிக்கு வருவதை குறைத்துள்ளதுடன் தேர்வுக்கும் வரவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் தற்போது தமிழ்நாட்டில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பின் காரணமாகவும் தேர்வு எழுத வரவில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து உரிய ஆய்வுகள் மேற்கொள்ள கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையல், +2 பொதுத் தேர்வு மொழித்தாளை எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
அதே போல் தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் புதுவிதமான வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இது, தமிழகத்தில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதை, கட்டுப்படுத்த மாநில அரசுகள் கடும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பரவி வரும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பில் இருந்து பள்ளி மாணவர்கள் பாதுகாக்கும் வகையில் முன்கூட்டியே ஆண்டுத் தேர்வை நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக நேற்று செய்தி வெளியானது.
ஆனால் வைரஸ் காய்ச்சல் காரணமாக 1 முதல் 9 -ம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு நடத்தும் திட்டம் இல்லை என்றும் வழக்கமான கல்வி அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது போலவே தேர்வுகள் நடைபெறும் என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதுவதற்கான நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment