Thursday, March 2, 2023

தேர்வு ரத்தான 10ம் வகுப்புக்கு மதிப்பெண் சான்றிதழ் கிடையாது

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, தேர்வு ரத்தான 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மதிப்பெண் குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

திருச்செந்துாரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனு:

கொரோனா வைரஸ் பரவலால், 2020 - 21ம் கல்வியாண்டில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 9.30 லட்சம் மாணவர்களுக்கு, மதிப்பெண் குறிப்பிடாமல் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இவ்வாறு வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழை திரும்ப பெற்று, ஒன்பதாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், சான்றிதழ் வழங்க வேண்டும்.

சி.பி.எஸ்.இ., மற்றும் இதர மாநில கல்வி பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு, 10ம் வகுப்பு தேர்வு நடத்தப்பட்டு, மதிப்பெண்களுடன் கூடிய சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.

தற்போது, ரயில்வே துறையில் 1.03 லட்சம் பணியிடங்களுக்கும், தபால் துறையில் 40 ஆயிரம் பணியிடங்களுக்கும், பெங்களூரு ரயில் 'வீல்' தொழிற்சாலையில் 4,103 பயிற்சியாளர் பணிக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க, 10ம் வகுப்பு மதிப்பெண்கள் அவசியம்.

எனவே, கொரோனாவால் தேர்வு ரத்தான 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மதிப்பெண் குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.

அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ''ஏற்கனவே இதே பிரச்னை தொடர்பான வழக்கில், தேர்வு நடத்தாமல் மதிப்பெண் வழங்கும்படி உத்தரவிட முடியாது என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,'' என்றார்.

இதை பதிவு செய்த முதல் பெஞ்ச், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News