Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழகத்தில் பழைய அரசு அலுவலர் குடியிருப்புகள் படிப்படியாக அகற்றப்பட்டு, புதிதாக கட்டப்படும். இதற்காக வரும் நிதியாண்டில் ரூ.100 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்படும்.
உயர்ந்து வரும் கட்டுமானச் செலவுகளைக் கருத்தில் கொண்டு, அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் வீடு கட்டும் முன்பணம் ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக வரும் நிதியாண்டில் இருந்து உயர்த்தப்படும்.
ஓய்வூதியர்கள் இறக்க நேரிட்டால் குடும்ப உறுப்பினர்களுக்கு நிதியுதவியாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது. கரோனா பெருந்தொற்றுக் காலத்துக்குப்பின் இந்த நிதியுதவிக்கான கோரிக்கைகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.ஓய்வூதியர்களின் குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு 2021-22-ம் ஆண்டில் ரூ.25 கோடியும், 2022-23ம் ஆண்டில் ரூ.50 கோடியும் சிறப்பு நிதியாக அரசு வழங்கியுள்ளது.
நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை தீர்வு செய்ய மேலும் ரூ.25 கோடி சிறப்பு ஒதுக்கீடாக வழங்கப்படுகிறது. கரோனா பெருந்தொற்றின்போது உயிரிழந்த 401 முன்களப் பணியாளர்கள் குடும்பத்துக்கு, தலா ரூ.25 லட்சம் வீதம் ரூ.100 கோடி கருணைத் தொகை முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்டுள்ளது.
அரசு, தனியார்பங்களிப்புடன் - ரூ.77,000 கோடியில் 15 புதிய நீரேற்று மின் திட்டங்கள்: தமிழகத்தில் உச்சநேர மின் தேவையை நிறைவு செய்வதற்காக அரசு-தனியார் பங்களிப்புடன் நீரேற்று மின் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
குந்தாவில் கட்டப்பட்டு வரும் 500 மெகாவாட் திறன்கொண்ட புனல்மின் திட்டம் 2024-25-ம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரும்.
மேலும், 2030-ம் ஆண்டுக்குள் ரூ.77 ஆயிரம் கோடியில், 14,500 மெகாவாட் திறன்கொண்ட 15 புதிய நீரேற்று மின் திட்டங்கள் அரசு- தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். தற்போது நடைபெற்று வரும் 4,100 மெகாவாட் அனல் மின்திட்டப் பணிகள் விரைந்து முடிக்கப்படும்.
2030-ம் ஆண்டுக்குள் 33 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மாநிலத்தின் உற்பத்தித் திறனை உயர்த்தி, மின் உற்பத்தியை இரட்டிப்பாக்க அரசு முடிவு செய்துள்ளது. மாநில மின் உற்பத்தியில் தற்போது 20.88 சதவீதமாக இருக்கும் பசுமை ஆற்றலின் பங்களிப்பை, 2030-ம் ஆண்டுக்குள் 50 சதவீதமாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது.
சூரிய ஆற்றல் திறன் 20 ஜிகாவாட், நிலப் பரப்பில் காற்றாலைகள் திறன் 70 ஜிகாவாட், கடல் பரப்பில் காற்றாலைகள் திறன் 30 ஜிகாவாட் என அதிகப்படியான பசுமை ஆற்றல் வளங்கள் தமிழகத்தில் உள்ளன. 2030-ம் ஆண்டுக்குள் மொத்த மின் உற்பத்தியில் 50 சதவீதத்துக்கும் மேல் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்களிப்பு இருக்கும் வகையில், பசுமை மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதற்கு சிறப்பு நிறுவனம் உருவாக்கப்படும்.
ஊரகப் பகுதிகளில் ரூ.2 ஆயிரம் கோடியில் 5,145 கி.மீ. சாலைகள் மேம்பாடு
ஊரகப் பகுதிகளில் அடுத்த 2 ஆண்டுகளில் 10 ஆயிரம் கி.மீ. நீள சாலைகளின் தரத்தை மேம்படுத்தி, சிறப்பான சாலை வசதிகளையும், பொருளாதார மேம்பாட்டையும் உறுதிசெய்ய முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தை அரசு இவ்வாண்டு தொடங்கியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் முக்கியமான இணைப்புச் சாலைகள், பேருந்துகள் இயங்கும் சாலைகள் ஆகியவை தரம் உயர்த்தப்படும். வரும் நிதியாண்டில் ரூ.2 ஆயிரம் கோடியில், 5 ஆயிரத்து 145 கி.மீ. நீள சாலைகளுக்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.
கிராமப்புறங்களில் கடந்த 2 ஆண்டுகளில் 6,618 நீர்நிலைகளில், ரூ.638 கோடியில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அடுத்த 2 ஆண்டுகளில் மேலும் 10 ஆயிரம் சிறிய நீர்நிலைகள், குளங்கள், ஊரணிகள் ஆகியவை ரூ.800 கோடியில் புதுப்பிக்கப்படும்.
வீட்டு வரி, தொழில் வரி, குடிநீர் வரியை ஊராட்சிகளுக்கு இணையவழியில் எளிதில் செலுத்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விரைவில் கட்டிட வரைபடம், மனை வரைபட அனுமதி பெற வழிவகை செய்யப்படும். தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 2023-24-ல் 35 கோடி வேலை நாட்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு மொத்தம் ரூ.22 ஆயிரத்து 562 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment