Join THAMIZHKADAL WhatsApp Groups
லஞ்சம் வாங்கிய வழக்கில் திருச்சி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், உதவி கண்காணிப்பாளருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
ரூ.7 ஆயிரம் லஞ்சம்
திருச்சி கைலாசபுரத்தில் உள்ள ஒரு நடுநிலைப்பள்ளியில் உதவி இடைநிலை ஆசிரியையாக குண்டூரை சேர்ந்த ஞானசெல்வி என்பவர் பணியாற்றி வந்தார். இவரது பணி நியமனத்திற்கு அங்கீகாரம் செய்ய ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கியது தொடர்பாக கடந்த 2002-ம் ஆண்டு திருச்சி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் வள்ளியப்பன், நேர்முக உதவியாளர் கவுரி, கண்காணிப்பாளர் கோவிந்தராஜ், உதவி கண்காணிப்பாளர் வரதராஜன் ஆகியோர் மீது திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
தலா 3 ஆண்டு சிறை தண்டனை
இதனை தொடர்ந்து, அவர்கள் மீது திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இதில் விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் போது கவுரி, கோவிந்தராஜ் ஆகியோர் இறந்துவிட்டனர். இந்த நிலையில் நேற்று திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு இந்த வழக்கு இறுதிகட்ட விசாரணைக்கு வந்தது.
இதில் வள்ளியப்பன், வரதராஜன் ஆகியோர் லஞ்ச பணம் கேட்டு பெற்ற குற்றத்திற்காக தலா ஒரு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 6 மாதம் சிறை தண்டனையும் மற்றும் அரசு பதவியை தவறாக பயன்படுத்திய குற்றத்திற்காக இருவருக்கும் தலா 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 6 மாதம் சிறை தண்டனை விதித்ததோடு இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment