Join THAMIZHKADAL WhatsApp Groups
7,301 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 4 எழுத்துத் தேர்வு முடிவுகள், நாளை (மார்ச் 20) தமிழ்நாடு பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லட்சக்கணக்கான தேர்வர்கள் குரூப் 4 தேர்வு முடிவுகளுக்கு தயாராக உள்ள நிலையில், இதற்கான கட் ஆஃப் என்னவாக இருக்கும் என்பதை இங்கு காணலாம்.
பொதுவாக, டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் பல்வேறு காரணிகள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. அறிவிக்கப்பட்ட காலியிடங்கள், கேள்வியின் கடினத்தன்மை, அனுபவம் வாய்ந்த போட்டியாளர்கள் எண்ணிக்கை ஆகியவை இதில் முக்கியமானதாகும்.
முன்னதாக, டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட ஆள்சேர்க்கை அறிவிப்பில் 7,301 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்தது. இருப்பினும், நியமனம் செய்யப்பட வேண்டிய குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கையை 9,801 ஆக உயர்த்த டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டு வருவதாக கடந்த ஜனவரி மாதம் செய்திகள் கசிந்தன. ஆனால், அதற்கான முன்னெடுப்புகள் எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை.
உதாரணமாக, கடந்த பிப்ரவரி 14ம் தேதியும், மார்ச் 9ம் தேதியும் குரூப் IV தேர்வின் முடிவுகள் வெளியிடுதல் குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட தெளிவுரையில் பணியிடங்களை உயர்த்துவது தொடர்பாக தேர்வாணையம் எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை. குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை அடுக்கிய டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம், கூடுதல் பணியிடங்கள் குறித்து வாயைத் திறக்க வில்லை.
அடுத்தகட்டமாக, தேர்வின் கடினத்தன்மையைப் பற்றி பாப்போம். குரூப் 4 எழுத்துத் தேர்வு இரண்டு பகுதிகளை கொண்டது. பகுதி 'அ '-வில் உள்ள கட்டாயத் தமிழ் பகுதியில் 100 வினாக்களும், பகுதி 'ஆ' வில் பொது அறிவு பாடத்தில் 75 வினாக்களும், கணித அறிவில் பாடத்தில் 25 வினாக்களும் இடம்பெற்றன.
முந்தைய, குரூப் 4 தேர்வுகளில், கட்டாய மொழிப் பாடங்களில் தமிழ் (அ) ஆங்கிலம் என்ற இரண்டில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு தேர்வர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இம்முறை தமிழ் மொழி மட்டுமே தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வாக அறிவிக்கப்பட்டது. எனவே, முந்தையை காலங்களில் ஆங்கில பாடங்களில் குரூப் 4 தேர்வுக்கு தயாராகி வந்த தேர்வர்களுக்கு இம்முறை டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு சற்று கடினமாகவே இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது, தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு சாதகமான போக்காக அமைந்துள்ளது.
தமிழ்நாட்டில் அரசுத் தேர்வுகளுக்கு தயாராகி வரும் இளநிலை மற்றும் முதுநிலை தேர்வர்கள் குரூப் 1 மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கும் சேர்த்து தயாராகி வருவதால், குரூப் 4 தேர்வில் தமிழை விட ஆங்கில பாடத்தையே அதிகம் தேர்ந்தெடுத்து வந்தனர். அதன்படி, முந்தைய காலங்களில் அதிகபட்ச உயர்கல்வியை முடித்தவர்களே குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்று வந்தனர்.
உதாரணமாக, 2015, 2016, 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் குரூப் 4 தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களில் இளநிலை பட்டதாரிகளின் எண்ணிக்கை 13,919 ஆகவும், முதுநிலை மாணவர்களின் எண்ணிக்கை 4,903 ஆகவும் உள்ளன. அதே சமயம், 10ம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 339 ஆக மட்டுமே உள்ளது. எனவே, தமிழ் பாடத்த்தைப் பொறுத்த வரையில் 90 முதல் 95 வரை மதிப்பெண்கள் பெறும் தேர்வர்கள் ஒட்டுமொத்த மதிப்பெண் பட்டியலில் நல்ல இடத்தை பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தபடியாக, இந்தாண்டு குரூப் 4 பொது அறிவு வினாக்களுமே கிராமப்புறத்தில் உள்ள தேர்வர்களுக்கான சாதகமான சூழலை ஏறடுத்திக் கொடுத்துள்ளது. பொது அறிவு வினாக்கள் குரூப் 4 தேர்வுக்கு மட்டுமே தயாராகி வரும் தேர்வர்களுக்கு சாதகமாக இருந்ததாக கூறப்படுகுறிது.
குரூப் 1, 2 மற்றும் ஐஏஎஸ் தேர்வுகளுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு சாதாகமான கேள்விகள் முற்றிலும் இடம் பெறவில்லை. எனவே, விடாமுயற்சியுடன் குரூப் 4 தேர்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தயாராகிய தேர்வர்கள் குறைந்தது 40-50 முதலான கேள்விகளுக்கு சரியான பதில் அளித்திருக்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கணித பாடத்தில், எளிமையாக 20 கேள்களுக்கு மேல் சரியான பதில் அளித்திருக்க முடியும்.
எனவே, பொது பிரிவினர் 175 (கூடவோ/குறையவோ செய்யலாம்) , பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறைந்தபட்சம் 170 (கூடவோ/குறையவோ செய்யலாம்), மிகவும் பிற்படுத்தப்பட வகுப்பினர் 168(கூடவோ/குறையவோ செய்யலாம்) , பட்டியலின வகுப்பினர் 160(கூடவோ/குறையவோ செய்யலாம்), பழங்குடியினர் 155 (கூடவோ/குறையவோ செய்யலாம்) கேள்விகளுக்கு மேல் சரியான பதில் அளித்திருந்தால் கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளது என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment