Join THAMIZHKADAL WhatsApp Groups
பிளஸ் 2 தேர்வு எழுத வராத மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஜூலை மாதம் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும் என்று சட்டசபையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் இதுபோன்ற நிலை வரக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
தமிழகம்,புதுச்சேரியில் கடந்த மார்ச் 13ஆம் தேதியன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது. மொழிப்பாடங்களை எழுதாமல் 50 ஆயிரம் மாணவர்கள் தவிர்த்தனர். இது மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கியது.
இதற்கான காரணம் குறித்து கல்வியாளர்களும், ஆசிரியர்களும் தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர். தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சம் காரணமாகவே பல மாணவர்கள் தேர்வு எழுதாமல் தவிர்த்து விடுவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் மாணவர்கள் தேர்வு எழுதாமல் ஆப்செண்ட் ஆனது ஏன் என்று கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்தார்.
கவன ஈர்ப்பு தீர்மானம்
தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் இன்றைய நிகழ்வில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாணவர்கள் ஆப்சென்ட் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதிமுக எம்எல்ஏவும் பள்ளிக்கல்வித்துறையின் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்து பேசினார்.
கொரோனாவால் பாதிப்பு
கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பல்வேறு மாற்றங்கள் ஏற்ப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பள்ளிக்கல்வித்துறை மட்டுமின்றி அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. பிளஸ்-2 பொதுத்தேர்வில் ஆப்சென்ட்டான மாணவர்களை கண்டறிந்து ஜூலையில் துணைத்தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களை கண்காணிப்போம்
வரும் கல்வியாண்டில் குறைந்தபட்ச வருகைப் பதிவேடு 75% இருக்க வேண்டும் என்பதை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாரத்தில் 3 நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்கள் இனிமேல் கண்காணிக்கப்படுவார்கள். இடையில் நின்ற 1.90 மாணவர்களில் 78,000 பேரை தொடர்ந்து கண்காணித்து தேர்வு எழுத வைத்துள்ளோம்.
மாணவர்கள் மீது அக்கறை
பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஏன் இவ்வளவு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத வரவில்லை என முதல்வர் தொலைபேசி மூலம் என்னிடம் கேட்டார். பள்ளிக்கு வராத மாணவர்களை கண்டறிந்து பள்ளிக்கு அழைத்து வந்து தேர்வெழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுஎதிர்காலத்தில் இதுபோன்ற நிலை வரக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இடைநின்ற மாணவர்கள் மீது அரசு அதிக அக்கறை கொண்டுள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். மிக நீண்ட விளக்கத்தையும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாசித்தார்.
பதற்றம் ஏற்படுத்த கூடாது
மாணவர்கள் ஆப்செண்ட் பற்றிய செய்தியில் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடாது. தெளிவாக செய்திகளை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்றார். 3 நாட்கள் மட்டுமே பள்ளிக்கு வந்தால் போதும் தேர்வு எழுதலாம் என்று தான் சொன்னதாக செய்திகள் வெளியானது. அது தவறான தகவல் என்றும் சட்டசபையில் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
No comments:
Post a Comment