Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழக அரசின் 2023-24ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை நாளை மறுநாள் தாக்கல் செய்யப்படுகிறது.
இதில், மின்சாரத் துறை சார்பில் பல்வேறு புதிய திட்டங்கள் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. கடந்த நிதியாண்டில் மின் துறையில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் இருந்ததாகவும், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு நடவடிக்கைகளால் 200 கோடி ரூபாய்க்கான இழப்பை குறைத்திருப்பதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
சூரிய ஒளி மின் உற்பத்தி மூலம் 3,088 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு கிடைத்து வரும் நிலையில், அவற்றை 20ஆயிரம் மெகாவாட் வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான அறிவிப்பு இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மின்சார முறைகேடு, மின் இழப்பு போன்றவற்றை தடுக்க அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்காதவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது, ஒரே இடத்தில் இரட்டை மின் இணைப்பை பெற்றிருந்தால் ஒரே மின் இணைப்பாக மாற்றுவது போன்றவை நிதிநிலை அறிக்கையில் இடம்பெறலாம் என தெரிகிறது.
தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதை கட்டுப்படுத்துவதற்கான அறிவிப்புகள், கூடுதலாக 1000 மெகா வாட் மின்சாரத்தை பெறுவதற்கான வடசென்னை அனல் மின் நிலையத்தின் மூன்றாம் கட்டப் பணிகள், காற்றாலை மூலம் மின்சார உற்பத்தி என பல்வேறு அறிவிப்பு வெளியிட மின்சாரத்துறை திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட மாதம் ஒருமுறை மின் கணக்கீடும் முறை, ஆண்டுதோறும் கட்டண உயர்வை தவிர்க்க மாற்று நடவடிக்கை குறித்த அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment