2020 மார்ச் மாதத்திற்கு முன்னர் முன் அனுமதி பெற்று உயர் கல்வி பயின்ற மற்றும் முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்கள் குறித்த விவரங்களை அனுப்ப கோரி தொடக்க கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களின் கல்விச் செலவு தொகை ரூ. 50 ஆயிரம் வரை உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், 2020 மார்ச் மாதத்திற்கு முன்னர் முன் அனுமதி பெற்று உயர் கல்வி பயின்ற மற்றும் முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்கள் குறித்த விவரங்களை அனுப்ப கோரி தொடக்க கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள மதிப்பீட்டு புலம் முன்னோட்ட காட்சி அரங்கத்தினை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். தனது பிறந்தநாள் அன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில முக்கிய அறிவிப்புகளை ஆசிரியர்களுக்காக வெளியிட்டிருந்தார்.
அதில், உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்காக தற்போது ஆசிரியர் நல நிதியிலிருந்து வழங்கப்பட்டு வரும் கல்விச் செலவு தொகை ரூ. 50 ஆயிரம் வரை உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்திருந்தார். நேற்று அறிவிப்பு வெளியான நிலையில், இன்று தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையின் தொடக்கக்கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளார்.
அதில் தொடக்கக் கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகள், நகராட்சி மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களில், கடந்த 2020 ம் ஆண்டு மார்ச் மாதம் பத்தாம் தேதிக்கு முன்னர் துறையின் முன் அனுமதி பெற்று உயர் கல்வி பயின்ற மற்றும் முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்கள் குறித்த விவரங்களை வரும் மார்ச் 15ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த விவரங்களை எந்தவித தவறுதலும் இன்றி சரியான முறையில் பூர்த்தி செய்து deeesection@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், இணை இயக்குனர் பெயரிட்ட முகவரிக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்தியுள்ளார்.
பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படாததால் ஆசிரியர்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில், உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்காக தற்போது ஆசிரியர் நல நிதியிலிருந்து வழங்கப்பட்டு வரும் கல்விச் செலவு தொகை ரூ. 50 ஆயிரம் வரை உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பினை செயல்படுத்துவதற்கான முதற்கட்ட பணிகளை பள்ளிக்கல்வித்துறை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment