Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை மறுநாள் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ளது.
இந்நிலையில் தேர்வுகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 13 ஆம் தேதி தொடங்க உள்ளது. அதேபோல் அதற்கு அடுத்த நாளான மார்ச் 14 ஆம் தேதி முதல் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்க இருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 2022- 2023 கல்வியாண்டிற்கான 12 ஆம் வகுப்பு தேர்வினை 8.5 லட்சம் மாணவர்களும் அதே போல 11 ஆம் வகுப்பு தேர்வினை 7.8 லட்சம் மாணவர்களும் எழுத உள்ளனர். 3225 மையங்களில் இந்த தேர்வுப் பணிகள் நடைபெற உள்ளது. கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் இந்த தேர்வுப் பணிகளிலும் விடைத்தாள் திருத்தும் பணிகளிலும் ஈடுபட உள்ளனர். இந்நிலையில் மாணவர்களுக்கான பதிவெண்கள் தேர்வறைகளில் எழுதும் பணிகளும் முடிவடைந்துள்ளது.
தேர்வு நேரங்களில் தேர்வர்கள் துண்டுத்தாள் வைத்திருத்தல், துண்டுத்தாள்களைப் பார்த்து எழுத முயற்சித்தல், பிற மாணவர்களைப் பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடந்து கொள்ளுதல், விடைத்தாள் பரிமாற்றம் செய்தல், விடைத்தாளில் தாம் எழுதிய அனைத்து விடைகளையோ / பகுதி விடைகளையோ தாமே கோடிட்டு அடித்தல் மற்றும் ஆள்மாறாட்டம் செய்தல் ஆகிய ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் கடும் குற்றமாகக் கருதப்படும். மேலும் தேர்வு மையங்களுக்குள் அலைப்பேசி எடுத்து வருவது தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வுக் கண்காணிப்பில் ஈடுபடும் ஆசிரியர்களும் தங்களுடன் செல்போன்களை வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையும் மீறி தேர்வர்களோ ஆசிரியர்களோ செல்பேசியை வைத்திருப்பதாகக் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment