Join THAMIZHKADAL WhatsApp Groups
நாம் சமைக்கும் அரிசி எந்த அரிசியாக இருப்பது நல்லது? எப்படி சமைப்பது? எந்த உணவை எல்லாம் நாம் சாப்பிட வேண்டும்?அதை எப்படி சாப்பிட வேண்டும்?
என்ற இதுபோன்ற பல விஷயங்களை அன்றே வள்ளலார் நமக்கு எடுத்துரைத்து சென்றுள்ளார். அதனை பற்றி சிலவற்றை இந்த பகுதியில் தெரிந்துக் கொள்ளலாம்.
அரிசி
நாம் சமைக்கும் அரிசி சீரக சம்பா அரிசியாக இருப்பது உடல் வலிமைக்கும், ஆரோக்கியத்திற்கும் மிகச்சிறந்த பலனை தரும். சீரக சம்பா சமைக்கும் பொழுது எந்த அளவிற்கு பிரமாதமான மணம் வீசும் என்பதை சமைத்து பார்த்தவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். சாப்பிட்ட உடன் வரும் தூக்கம் கூட சீரகசம்பா சாப்பிடுவதால் அறவே வராது. அரிசி வகைகளில் மிகவும் சுவையான அரிசி சீரகசம்பா தான். இன்று பெரும்பாலான மாவட்டங்களில் பிரியாணியை சீரகசம்பா வைத்துதான் செய்கிறார்கள்.
இயற்கையாக விளையும் கைக்குத்தல் அரசியான பச்சரிசியை சாப்பிடுவது ஆரோக்கியத்தை தரும். கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள், உடல் பலவீனமானவர்கள் பச்சரிசி சாதம் சாப்பிடலாம். ஜீரண கோளாறு உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்ப்பது நல்லது. எந்த அரிசியாக இருந்தாலும் அதை சரியான பதத்தில் வேகவிட வேண்டும். பின்பு நாம் சாப்பிடும் அரிசி உணவை நன்கு மென்று உமிழ்நீருடன் கலந்து பின் விழுங்குவது தான் ஜீரணத்திற்கு நல்லது.
கீரை
கீரை வகைகளில் இரும்புச் சத்தும், தாது சத்தும் அதிகம் இருப்பதால் தினமும் ஒரு கீரை எடுத்து கொள்வது நல்லது. அதிலும் குறிப்பாக கரிசலாங்கண்ணி, தூதுவளை, பொன்னாங்கண்ணி, பசலை, முருங்கை போன்ற கீரை வகைகளை பருப்பு, மிளகு சேர்த்து சமைத்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சக்திவாய்ந்த உணவாகும். புளியாரை என்னும் கீரையை தினமும் எடுத்துக் கொள்வது ஆயுளைக் கூட்டும் என்றார்.
காய்கறிகள்
காய்கறிகளில் கத்தரிக்காய், வாழைக்காய், அவரைக்காய், முருங்கைக்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய், புடலங்காய், தூதுவளங்காய், கொத்தவரங்காய், பேயன் வாழைக்காய், கருணைக்கிழங்கு இவைகள் மிகவும் உடலுக்கு நன்மை பயப்பவை என்கிறார் வள்ளலார். பழவகைகளில் பேயன் வாழைப்பழம், ரஸ்தாலி உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்கிறார்.
பருப்பு
பருப்பு வகைகளில் மற்ற பருப்பு வகைகளை குறைந்த அளவே எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் துவரம் பருப்பு மிகுந்த ஆரோக்கியம் தரும் பருப்பு வகையாகும். இதில் இருக்கும் புரதம் உடலின் சீரான வளர்ச்சிக்கு உதவி புரியும். ரத்த ஓட்டத்தை சீராக்கி இதயத்திற்கு நன்மை செய்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது என்கிறார்.
அன்றைய உணவை அன்றே சாப்பிட வேண்டும்:
1. முதல் நாள் செய்த உணவை மறுநாள் நன்றாகவே இருந்தாலும் சூடுபடுத்தி சாப்பிடுவது நல்லதல்ல. அன்றைய நாள் சமைத்த உணவை மிதமான சூட்டில் எடுத்துக்கொள்வதே ஆரோக்கியத்திற்கு நல்லது என்கிறார் வள்ளலார்.
2. உப்பு, புளி, மிளகாய் இந்த மூன்றையும் குறைந்த அளவே சேர்க்க வேண்டும். இந்த மூன்றையும் வெறும் வாணலியில் வறுத்து எடுத்த பின் உணவில் சேர்ப்பதே சிறந்தது என்கிறார். மிளகாய் குறைத்து அதற்கு பதிலாக மிளகை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டுமாம்.
3. பூண்டு மற்றும் வெங்காயம் அதிக அளவு சேர்த்துக் கொள்ளக் கூடாது. ஜீரகம் தேவை ஆனால் கடுகு சமையலுக்கு தேவையே இல்லை என்று வள்ளலார் கூறியுள்ளார்.
4. தாளிக்க எப்போதுமே பசுநெய் அல்லது நல்லெண்ணை பயன்படுத்த வேண்டுமாம்.
5. அசைவ உணவை சாப்பிட்டால் மனிதனுக்கு ஏற்படக்கூடிய கோபம், குரோதம், காமம் போன்ற உணர்வுகளை கட்டுக்குள் வைக்க முடியாமல் அவஸ்தைப்பட வேண்டுமாம். சைவ உணவே இருந்தாலும் அதில் எந்த உணவை, எந்த விதத்தில், எந்த விகிதத்தில் எப்போது எடுத்துக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே உடல் ஆரோக்கியம் தருபவையாம்.
இவற்றையெல்லாம் முறையாக பின்பற்றினால் உடல் ஆரோக்கியமும், ஆயுளும் கூடும் என்று வள்ளலார் அன்றே சொல்லிச்சென்றுள்ளார்.
No comments:
Post a Comment