Join THAMIZHKADAL WhatsApp Groups
கொடியினத்தைச் சார்ந்த வல்லாரைக் கீரை நீங்கள் குறிப்பிடுவதுபோல, தோல் புண்களை விரைவாக ஆற்றக் கூடிய குணம் நிறைந்த ஒரு சத்துள்ள கீரையாகும்.
தோல் பகுதியில் ஏற்படும் புண்களை விரைவாக ஆற்றிவிடும் குணம் வல்லாரைக் கீரைக்கு இருப்பதாக அறிகிறேன். அது எப்படி சாத்தியமாகிறது? - நாகராஜன், காஞ்சிபுரம். "சென்டெல்லா அசைசிட்டா' எனும் கொடியினத்தைச் சார்ந்த வல்லாரைக் கீரை நீங்கள் குறிப்பிடுவதுபோல, தோல் புண்களை விரைவாக ஆற்றக் கூடிய குணம் நிறைந்த ஒரு சத்துள்ள கீரையாகும்.
'ஸூஸ்ருத சம்ஹிதை' எனும் ஆயுர்வேத நூலில், வல்லாரை பற்றிய வர்ணனையில், "ரத்தக் கசிவு உபாதைகளைக் குணப்படுத்தும். இதயத்தை வலுவூட்டும். செரிப்பதில் லேசானது. தோல் சார்ந்த குஷ்ட உபாதை, சர்க்கரை வியாதி, காய்ச்சல், மூச்சிரைப்பு, இருமல், நாக்கில் ஏற்படும் ருசியின்மை போன்ற உபாதைகளை நன்கு குணப்படுத்தக் கூடியது.
அதனுடைய துவர்ப்புச் சுவையினால் பித்தம் சார்ந்த உபாதைகளை நீக்கும். சுவையிலும், சீரண இறுதியிலும் சுவையில் இனிப்பை வெளிப்படுத்துவதால் குளிர்ச்சியானது'' என்றெல்லாம் பாராட்டுகிறார்கள். "சரக ஸம்ஹிதை' எனும் ஆயுர்வேத நூலில், வல்லாரை பற்றிக் குறிப்பிடுகையில், "கபம் மற்றும் பித்தம் சார்ந்த வெளிப்புற- உட்புற உபாதைகளைக் கண்டிக்கும். கசப்பு, குளிர்ச்சி, சீரண இறுதியில் கார்ப்புச் சுவையுடையது'' என்று கூறியிருக்கின்றனர்.
"அஷ்டாங்க ஹிருதயம்' எனும் ஆயுர்வேத நூலில் "மலக்கட்டை ஏற்படுத்தும், வாயுவைத் தூண்டும். கப- பித்த உபாதைகளுக்கு மிகவும் நல்லது'' என்ற மற்ற நூல்களில் குறிப்பிடாத கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன. "சாலிக்கிராம நிகண்டு' எனும் நூலில், பேதியை ஏற்படுத்தும் என்ற புதிய கருத்தை முன்வைக்கிறார்கள். வல்லாரைக் கீரையினுடைய இடித்துப் பிழிந்த சாற்றை தோலில் தடவினால் நீர்கோர்த்த கொப்பளங்கள் வாடும் என்ற ஒரு புதிய செய்தி "ஷோடல நிகண்டு'வில் காணப்படுகிறது.
சரக ஸம்ஹிதையில்,மேலும் கூறப்பட்டிருப்பதாவது "வல்லாரைக் கீரையின் சாற்றைக் குடித்தால், ஆயுள் வளரும். உடல் பலம் பெருகும். பசியைத் தூண்டும். உடல் நிறத்தைக் கூட்டும்.
குரல் வளம் நன்றாகும். அறிவாற்றலை வளர்க்கும்'' என்று வல்லாரையைப் பாராட்டி வர்ணித்திருக்கிறார்கள். நெய்யில் வறுத்த வல்லாரைக் கீரையைத் தொடர்ந்து ஒரு மாதம் உண்டு வர, வாழ்நாள் முழுவதும் உடல் புஷ்டி, அறிவு, இளமை, வனப்பு போன்றவை உடனிருக்கும் என்ற ஓர் அதிசயமான புகழை அஷ்டாங்கஹிருதய நூல் எடுத்துரைக்கிறது. பொதுவாகவே, வல்லாரையைப் பயன்படுத்துபவர்களுக்கு நல்ல உறக்கம் ஏற்படும்.
இதயத்தை வலுப்படுத்தி, ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். நரம்புகளை வலுவூட்டும். பசியைத் தூண்டும்; குடல்வாயுவை வெளியேற்றும். தோல் உபாதைகளைக் கண்டிக்கும்.
சிறுநீரை வெளியேற்றி காய்ச்சலை குணப்படுத்தும். காக்காய் வலிப்பு, குரல் கம்முதல், ஆஸ்துமா, இருமல், விக்கல், மன வளர்ச்சி குன்றிய நிலை, வயிற்று உபாதைகள், குஷ்ட நோய் ஆகியவற்றில் உணவாக ஏற்று குணப்படுத்திக் கொள்ள பயன் படும் சிறந்த கீரையாகும். இந்தக் கீரையை மாத்திரை வடிவத்தில் கொண்டு வந்து தற்சமயம் விற்பனையிலுள்ளது. முக்கியமாக, புண்களை விரைவாக ஆற்றி குணப்படுத்தும் நோக்கில் மாத்திரை விற்கப்படுகிறது
No comments:
Post a Comment