Join THAMIZHKADAL WhatsApp Groups
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப். 6-ம் தேதி தொடங்கியது. நேற்று நடந்த ஆங்கிலம் வினாத்தாளில் தவறுகள் இருப்பதாக மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக ஆங்கில ஆசிரியர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: ஆங்கில தேர்வு வினாத்தாளில் முதல் பகுதியில் 1 முதல் 6 வரையில் ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு இணைச்சொல் விடையளிக்க வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வ வினாத்தாள் வடிவமைப்பின்படி, 1 முதல் 3 வினாக்கள் இணைச்சொல்லாகவும், 4 முதல் 6 வரையிலான வினாக்கள் எதிர்ச்சொல்லாகவும் இருக்க வேண்டும் எனகுறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
ஒருசில பள்ளி தேர்வு மையங்களில் தேர்வறை கண்காணிப்பாளர்கள், மாணவர்களை 4, 5 மற்றும் 6 வினாக்களுக்கு எதிர்ச்சொல்எழுதுமாறு சொல்லியிருக்கிறார் கள். சில பள்ளிகளில், இணைச் சொல் எழுதுமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தகுழப்பங்கள் நீங்க வேண்டுமானால் 4, 5 மற்றும் 6 வினாக்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
இதுகுறித்து அரசு தேர்வுத்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ''10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆங்கில வினாத்தாள் விவகாரம் எங்களின் கவனத்துக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. வினாத்தாளில் எந்தவிதமான தவறும் கிடையாது.
தற்போது பொதுத்தேர்வுகளுக்கு புளு பிரிண்ட் முறை நடைமுறையில் இல்லை. எனவே இணைச்சொற்கள், எதிர் சொற்கள் கட்டாயம் கேட்க வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் இல்லை. ஆறு கேள்விகளும் இணைச் சொற்களாக கேட்பதற்கும் அதில் வழிவகை இருக்கிறது. எனினும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த விஷயத்தில் அரசிடம் ஆலோசித்து முடிவெடுக்கப் படும்'' என்று தெரிவித்தனர்.
No comments:
Post a Comment