Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, April 21, 2023

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு: மே 17-ம் தேதி முடிவு வெளியீடு


பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நேற்று நிறைவுபெற்றது. தேர்வு முடிவுகள் மே 17-ம் தேதி வெளியிடப்பட உள்ளன. தமிழகத்தில் 11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 13 முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெற்றன.

ஏறத்தாழ 16 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். விடைத்தாள்களை திருத்தும் பணிகள் கடந்த 10-ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. அதேபோல, பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த 6-ம் தேதி தொடங்கி, நேற்றுடன் நிறைவு பெற்றது. இறுதிநாளில் சமூக அறிவியல் பாடத் தேர்வு நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 4,167 மையங்களில் 9.2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.

தேர்வு வினாத்தாளில் ஒரு மதிப்பெண் வினாக்கள் தவிர்த்து, மற்ற பகுதிகள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். பொதுத்தேர்வு முடிந்ததையடுத்து, மாணவ, மாணவிகள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். சில பள்ளிகளில் பிரிவு உபச்சார விழாக்கள் நடத்தப்பட்டன.

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் வரும் 24-ம் தேதி முதல் மே 3-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து, ஏற்கெனவே திட்டமிட்டபடி தேர்வு முடிவு மே 17-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக கல்வித் துறை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News