Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, April 21, 2023

கடக ராசிக்கான 2023 குருப்பெயர்ச்சி பலன்கள்!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
மலர்ந்த முகத்துடன் அனைவரிடமும் மனம்விட்டுப் பேசும் கடகராசி அன்பர்களே... தயாள குணம் கொண்டவர்கள் நீங்கள்.

ஒரே நேரத்தில் பல வேலைகளைப் பார்க்கும், அசாத்தியத் திறமைக் கொண்ட நீங்கள், அதிகாரப் பதவியில் அமர்ந்தாலும் அடக்கமாக இருப்பீர்கள்.

அப்படிப்பட்ட உங்களுக்கு இதுவரை ஒன்பதாவது வீட்டில் அமர்ந்திருந்து ஓரளவு வசதி வாய்ப்புகளையும், புதிய தொடர்புகளையும் கொடுத்த குருபகவான் 22.4.2023 முதல் 1.5.2024 வரை உங்கள் ராசிக்குப் பத்தாவது வீட்டில் அமர்ந்து பலன் தர இருக்கிறார். இதனால் வேலையில் சிறிது தடுமாற்றம், இழுபறி நிலையை உண்டாக்க இருக்கிறார். வீண் விவாதங்கள், பகை வரக்கூடும்.
வேலை

என்றாலும் உங்கள் ராசிக்கு 2-ம் வீடான வாக்கு ஸ்தானத்தை குரு பார்ப்பதால் வாய் ஜாலத்தால் பல பெரிய காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்கள். வர வேண்டிய பணம் வெகுநாள்களாகியும் வராமல் இருந்ததே, இனி வந்துசேரும். பழைய சொத்துப் பிரச்னைகளுக்கு சுமுகமான தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் ஓரளவு நிம்மதி கிட்டும். முன்பிருந்ததை விட வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் மேம்படும். 

பார்வைக் கோளாறு நீங்கும். கைமாற்றாக வாங்கி இருந்ததைத் தந்து முடிப்பீர்கள். பணம் வரும். ஆனால், முன்பு போல கேட்டவர்களுக்கெல்லாம் வாரி வழங்கிக் கொண்டிருக்காதீர்கள். உங்களுக்காகவும் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். அநாவசிய, ஆடம்பரச் செலவுகளைக் குறைக்கப் பாருங்கள். அவ்வப்போது ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு அளவைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். கோதுமை, கீரை மற்றும் நார்சத்து உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். லாகிரி வஸ்துக்களைத் தவிர்ப்பது நல்லது.

குருபகவானின் பார்வைப் பலன்கள்

குரு பகவான் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டை பார்ப்பதால் தாயாருக்கு இருந்து வந்த கை, கால், மூட்டுவலியெல்லாம் நீங்கும். எப்போதும் புலம்பிக் கொண்டிருந்த தாயாரின் மனசு மாறும். தாய்வழி சொந்தங்களால் ஆதாயமுண்டு. நேர்த்திக்கடனை நிறைவேற்றுவீர்கள். காற்றோட்டமில்லாத, தண்ணீர் வசதியில்லாத வீட்டிலிருந்து நல்ல வீட்டிற்கு மாறுவீர்கள். சிலருக்கு வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். பழுதாகியிருந்த வாகனத்தை மாற்றுவீர்கள்.

கடகம் குருப்பெயர்ச்சி பலன்கள்

ராசிக்கு 6-ம் வீட்டை குருபகவான் பார்ப்பதால் பழைய கடனில் ஒரு பகுதியைத் தீர்க்க வழி பிறக்கும். வெளிநாட்டிலிருப்பவர்களின் உதவி கிடைக்கும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். உத்தியோக ஸ்தானமான பத்தாம் வீட்டில் குரு நிற்பதால் வேலைச்சுமை வாட்டியெடுக்கும். ஆனால் எந்த வேலையையும் திறம்படச் செய்து முடிக்க முடியாமல் போகக்கூடும். வீண்பழி, மன உளைச்சல், ஏமாற்றம் வரக்கூடும். சேமிப்புகள் கரையக்கூடும். பிள்ளைகளின் பொறுப்பில்லாத் தனத்தை நினைத்து வருந்துவீர்கள். அவர்களிடம் அதிகக் கண்டிப்பு காட்டாமல் அவர்கள் போக்கிலேயே சென்று திருத்தப்பாருங்கள். பிள்ளைகளின் உயர்கல்விக்காக அதிகம் போராட வேண்டியிருக்கும். கல்யாணமும் இழுபறியாகி முடியும்.

உடன்பிறந்தவர்கள் சில நேரங்களில் ஒத்தாசையாக இருந்தாலும் பலதருணங்களில் தொந்தரவு தருவார்கள். பூர்வீக சொத்தை விற்று, வேறிடத்தில் சொத்து வாங்குவீர்கள். திருமணம், புதுமனைப் புகுதல், கோயில் விழாக்களில் கலந்து கொள்ளும்போது யாரைப் பற்றியும் விமர்சித்துப் பேச வேண்டாம். உறவு வட்டத்திலிருந்து கொஞ்சம் தள்ளி நின்று பழகுங்கள். கார -சாரமான அசைவ உணவுகளை அறவே ஒதுக்கிவிடுங்கள். அக்கம்பக்கம் வீட்டாருடன் அளவாகப் பழகுங்கள்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

22.4.2023 முதல் 23.6.2023 வரை மற்றும் 23.11.2023 முதல் 6.2.2024 வரை குருபகவான் அசுவனி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் இந்தக் காலகட்டத்தில் திடீர் செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் எதிர்பாராத பணவரவு உண்டு. பிரபலங்களின் நட்பு கிடைக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். அரசால் ஆதாயம் உண்டு. முன்கோபம், வீண் சந்தேகங்களை தவிர்ப்பது நல்லது.

23.6.2023 முதல் 22.11.2023 வரை மற்றும் 6.2.2024 முதல் 17.4.2024 வரை சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சாரம் செய்து பலன் தர இருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் மூத்த சகோதர வகையில் உதவி உண்டு. திடீர் பணவரவு உண்டு. என்றாலும் சுக்கிரன் உங்களுக்கு பாதகாதிபதியாக இருப்பதால் புது நண்பர்களிடம் கவனம் தேவை. வழக்குகளில் அலட்சியம் வேண்டாம். சிறுசிறு வாகன விபத்துகள் வந்து போகும். மறைமுக எதிரிகளைக் கண்டறிவீர்கள். சொத்துகள் வாங்குவது, விற்பதில் கவனம் தேவை.

17.4.2024 முதல் 1.5.2024 வரை குருபகவான், சூரிய பகவானின் கார்த்திகை நட்சத்திரம் 1-ம் பாதத்தில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள். போட்டியில் வெற்றி உண்டு.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்

11.9.2023 முதல் 20.12.2023 வரை அசுவினி நட்சத்திரம் மற்றும் பரணி நட்சத்திரங்களில் குருபகவான் வக்ர கதியில் செல்வதால் இந்தக் காலக்கட்டத்தில் வீண் அலைச்சல், தர்ம சங்கடமான சூழ்நிலைகள் வந்து விலகும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். வீட்டிலும் கழிவு நீர் குழாய் அடைப்பு, குடி நீர் குழாய் அடைப்பு வந்து நீங்கும்.

வியாபாரம் : போட்டியாளர்களைச் சமாளிக்க, விளம்பர யுக்திகளைக் கையாளுங்கள். பழைய தவறுகள் நடக்காத வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள். சந்தை நிலவரங்களையும் அவ்வப்போது அறிந்து கொள்வது நல்லது. சிலரின் தவறான ஆலோசனைகளை ஏற்காதீர்கள். யாருக்கும் கடன் தரவேண்டாம். பாக்கிகளை முடிந்த வரையில் கனிவாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். வேலையாட்கள் சிலநேரங்களில் முரண்டு பிடித்தாலும் ஒத்தாசையாக இருப்பார்கள். கமிஷன், கெமிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் துணி வகைகளால் லாபமடைவீர்கள். அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய வரிகளை உடனே செலுத்திவிடுவது நல்லது. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களுடன் இருந்து வந்த கோபதாபங்கள் நீங்கும். ஜூன், செப்டம்பர் மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். லாபம் அதிகரிக்கும்.

வேலை : பகல் இரவு பார்க்காமல், குடும்பத்தையும் சரிவர கவனிக்க முடியாமல் நிறுவனத்திற்காக உழைத்து ஓடாய் தேய்ந்தீர்களே! இனி பதவி உயரும். அலுவலக ரகசியங்களைப் பற்றியோ, மேலதிகாரிகளைப் பற்றியோ வெளியில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். சின்னச் சின்ன அவமானங்களையும், இடமாற்றங்களையும் சந்திக்க நேரிடும். வேலைச்சுமை வாட்டியெடுக்கும். மற்றவர்களின் பணிகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். மேலதிகாரியால் அலைக்கழிக்கப்படுவீர்கள். அடிக்கடித் தேவையில்லாமல் விடுமுறையில் செல்வதை நிறுத்துங்கள். உங்களுக்கு எதிராகச் சிலர் சதித் திட்டம் தீட்டுவார்கள். அதில் வெற்றி பெறுவீர்கள். புதுவாய்ப்புகள் வந்தால் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஏற்றுக்கொள்வது நல்லது. சக ஊழியர்களால் சில இன்னல்கள் வரத்தான் செய்யும். செப்டம்பர், அக்டோபர், ஜனவரி மாதங்களில் உயர்வு உண்டு. கணினித் துறையினருக்கு வேலைபளு அதிகமானாலும் அதற்குத்தகுந்த சம்பள உயர்வும் உண்டு. வெளிநாட்டுத்தொடர்புடைய நிறுவனங்களிலிருந்தும் புதிய வாய்ப்புகள் வரும்.

இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு சில ஏமாற்றங்களையும், இழப்புகளையும் தந்தாலும் செயற்கரிய செயல்களையும் செய்ய வைத்து உயர்த்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

பரிகாரம்: ஏதேனும் ஒரு வியாழக் கிழமை அன்று, மயிலாடுதுறை வதாரண்யேஸ்வரர் கோயிலில் அருளும் கங்கா அனுக்கிரக மேதா தட்சிணாமூர்த்தியை தரிசித்து வழிபட்டு வாருங்கள்; குருவருள் பெருகும்; காரிய வெற்றிகள் கைகூடும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News