Join THAMIZHKADAL WhatsApp Groups
இதயத்தால் பேசி இணக்கமாய் வாழும் மிதுனராசி அன்பர்களே... நீங்கள், எல்லா வேலைகளையும் எடுத்துக் கட்டி செய்பவர்கள்.
நிர்பந்தங்களுக்கும், அடக்குமுறைகளுக்கும் அடிபணிய மாட்டீர்கள்.
எதார்த்தமாகப் பேசும் நீங்கள், சில நேரங்களில் வருங்காலம் பற்றிய கனவு கண்டாலும் அதை உழைப்பால் அடைய வேண்டுமென நினைப்பீர்கள். அப்படிப்பட்ட உங்களுக்கு இதுவரை ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு எந்த வேலையையும் முழுசாகச் செய்ய விடாமல் முடக்கி வைத்தது, வீண்பழி, அவமானங்களையும் தந்துகொண்டிருந்த குருபகவான் இப்போது 22.4.2023 முதல் 1.5.2024 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டிற்குள் வந்து அமர்வதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். தொட்ட காரியங்கள் துலங்கும். சோர்ந்திருந்த நீங்கள், உற்சாகமடைவீர்கள்.
வரவேண்டிய பணமும் வராமல் தவித்தீர்களே! பழைய கடன் பிரச்னைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் அளவிற்கு வருமானம் உயரும். ஷேர் மூலம் பணம் வரும். பிரபலங்கள், நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். வீட்டில் ஒருவேளைகூட நிம்மதியாக சாப்பிடமுடியாமல் மன உளைச்சலுக்கு ஆளானீர்களே! வாழ்க்கைத்துணையுடன் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருக்கும்போதே சண்டை மூண்டதே! பலநேரங்களில் மௌன யுத்தமெல்லாம் நடத்தினீர்களே! அந்த அவல நிலை இனி மாறும். இருவரும் மனம்விட்டுப் பேசுவீர்கள். கலகம் ஏற்படுத்தியவர்களை ஓரங்கட்டுவீர்கள். சகோதரிக்கு தள்ளிப் போய்க் கொண்டிருந்த கல்யாணம் இனி சிறப்பாக முடியும். உங்களை அலட்சியப்படுத்திய உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். அவர்கள் வீட்டு கல்யாண விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும்.
குருபகவானின் பார்வைப் பலன்கள்
குருபகவான் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டைப் பார்ப்பதால் இளைய சகோதரருடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். சகோதரியின் திருமணத்தை நல்லபடியாக முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் சாதாரணமாகப் பேசினாலே சண்டைக்கு வந்தார்களே! இனி உங்கள் பேச்சில் தெளிவு பிறக்கும். பூர்வீகச் சொத்திலிருந்த பிரச்னைகள் நீங்கும். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். அவர்களின் துணையுடன் முக்கிய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். அடகிலிருந்த பொருள்களை மீட்பீர்கள். அடிமனசில் இருந்த பய உணர்வு நீங்கும். பணப்பற்றாக்குறையினால் பாதியிலே நின்ற வீடு கட்டும் வேலையை முழுமையாக முடிப்பதற்கு வங்கிக் கடனுதவி கிடைக்கும். கடினமான வேலையைக் கூட இனி எளிதாக முடிப்பீர்கள்.
குருபகவான் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால் தள்ளிப் போய்க் கொண்டிருந்த பிள்ளைகளின் திருமணம் சிறப்பாக முடியும். வசதிகள் எவ்வளவு இருந்து என்ன பிரயோஜனம், வீட்டில் துள்ளி விளையாட ஒரு பிள்ளையில்லையே என்று வருந்திக்கொண்டிருந்த தம்பதியருக்கு இனிக் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
குருபகவான் உங்களின் 7-ம் வீட்டைப் பார்ப்பதால் வாழ்க்கைத்துணை வகையில் ஆதாயமுண்டு. அவர்வழி உறவினர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். புது வீடு, வாகனம் வாங்குவீர்கள். பணப்பற்றாக்குறையால் வீடு கட்டும் பணி பாதியிலேயே நின்று போனதே! இனி முழுமையடையும். தங்க ஆபரணங்கள், ரத்தினங்கள் வாங்குவீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். இழுபறியாக இருந்த பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். தாய்மாமன், அத்தை வழியில் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் பலர் உங்களுக்குத் தகுந்தாற்போல் பேசி ஏமாற்றினார்களே! அவர்களில் நல்லவர் யார், கெட்டவர் யார் என்பதை இனி உணருவீர்கள்.
மிதுனம் குருப்பெயர்ச்சி பலன்கள்
அயல்நாடு சென்று வர விசா கிடைக்கும். அரசாங்க விஷயங்களில் இருந்து வந்த பின்னடைவு இனி விலகும். உங்களைக் கண்டு ஒதுங்கிச் சென்றவர்களெல்லாம் இனி வலிய வந்து உறவாடுவார்கள். கூட்டாகத் தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டு. வேற்று மொழிக்காரர்களால் பயனடைவீர்கள். வெகுநாள்களாகப் போக நினைத்த வெளிமாநிலப் புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். அக்கம்பக்கம் வீட்டாருடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். அவர்களின் சுபகாரியங்களுக்கு பண உதவி செய்வீர்கள்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
22.4.2023 முதல் 23.6.2023 வரை மற்றும் 23.11.2023 முதல் 6.2.2024 வரை குருபகவான் அசுவனி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்து பலன்தர இருப்பதால் பணபலம் உயரும். புதியவர்களின் நட்பால் வாழ்க்கையில் அதிரடி மாற்றம் உண்டாகும். புதிய திட்டங்கள் யாவும் நிறைவேறும்.
23.6.2023 முதல் 22.11.2023 வரை மற்றும் 6.2.2024 முதல் 17.4.2024 வரை உங்கள் பூர்வ புண்ணியாதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சாரம் செய்து பலன் தர இருப்பதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீக சொத்து சிக்கல்கள் தீரும். வழக்கில் வெற்றி உண்டு. புதிதாக வீட்டிற்குத் தேவையான எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்குவீர்கள். ஆடை, ஆபரணமும் சேரும்.
17.4.2024 முதல் 1.5.2024 வரை குருபகவான் சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1-ம் பாதத்தில் சஞ்சாரம் செய்து பலன் தர இருக்கும் இந்தக் காலகட்டத்தில் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். செல்வாக்குக் கூடும். சகோதர வகையில் நன்மை உண்டு.
குருபகவானின் வக்ர சஞ்சாரம்
11.9.2023 முதல் 20.12.2023 வரை குருபகவான் அசுவினி நட்சத்திரம் மற்றும் பரணி நட்சத்திரங்களில் வக்ர கதியில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் வாகன விபத்து, மின்னணு, மின்சார சாதனப் பழுது, தொண்டைப் புகைச்சல், சளித் தொந்தரவு இருப்பதைப்போல் லேசான தலைவலி வந்து போகும். ஆனால் ஒரு பக்கம் செல்வாக்குக் கூடும். பணவரவு உண்டு. வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள்.
வியாபாரம் : போட்ட பணத்தை வட்டியும் முதலுமாக எடுத்துவிடலாம் என்று பல முறை பெருந்தொகை போட்டு மாட்டிக்கொண்டீர்களே! அந்த அவலநிலை மாறும். தேங்கிக் கிடந்த சரக்குகளைப் புது சலுகைகள் மூலம் விற்றுத்தீர்ப்பீர்கள். புதிய முதலீடுகளைப் போட்டுக் கடையை விரிவுபடுத்துவீர்கள். அனுபவமிகுந்த வேலையாட்கள் வந்து சேருவார்கள். ஏப்ரல், மே மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பழைய பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள். வாடிக்கையாளர்களைக் கவரப் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். கெமிக்கல், ஹோட்டல், கமிஷன், இரும்பு வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடையே இருந்து வந்த பிரச்னைகள் ஓயும். உங்களின் செயலைப் புரிந்து கொள்வார்கள்.
வேலை : சூழ்ச்சியாலும், மறைமுக எதிரிகளாலும் அவமானத்தை சந்தித்தீர்களே, இனி உங்கள் கை ஓங்கும். உங்களை விட வயதில், தகுதியில் குறைவானவர்களுக்கெல்லாம் பதவி உயர்வு கிடைத்ததே! இனி அந்த நிலை மாறும். பதவி உயர்வு, சம்பள உயர்வு உடனே கிட்டும். இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். வேலைச்சுமை குறையும். தலைமைப் பொறுப்பு தேடி வரும். உங்களைக் குறைக் கூறிக் கொண்டிருந்த மேலதிகாரி வேறிடத்திற்கு மாற்றப்படுவார். தள்ளிப் போன பதவியுயர்வு, சம்பள உயர்வு இனி ஜூன், மார்ச், ஏப்ரல் மாதங்களில் தடையில்லாமல் கிடைக்கும். மூத்த அதிகாரியின் ஆதரவு பெருகும். கணினி துறையினருக்கு வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து அதிக சம்பளத்துடன் கூடிய அழைப்பு வரும்.
இந்த குருப்பெயர்ச்சி காட்டாற்று வெள்ளம் போல் அதிரடியாக யோகம் தருவதுடன், உங்களைச் சாதனையாளராகவும் மாற்றிக் காட்டும்.
பரிகாரம்: கும்பகோணம் அருகே உள்ள ஆலங்குடிக்குக் குடும்பத்துடன் சென்று, ஶ்ரீஆபத்சகாயேஸ்வரரையும் தட்சிணாமூர்த்தி பகவானையும் வழிபடுவது விசேஷம். மட்டுமன்றி, ஏழைப் பிள்ளைகளின் கல்விக்கு உதவுங்கள்; சந்தோஷம் பெருகும்.
No comments:
Post a Comment