Join THAMIZHKADAL WhatsApp Groups
பகைவனுக்கும் உதவும் பரந்த மனசுக்குச் சொந்தக்காரர்களான கன்னி ராசி அன்பர்களே... விகட கவியாகப் பேசும் நீங்கள், வேதனையுடன் வருபவர்களை தேற்றுவதில் வல்லவர்கள்.
ரகசியங்களைப் பாதுகாக்கத் தெரியாத நீங்கள், எல்லோரும் நல்லவர்கள் என்று நம்பி சில நேரங்களில் ஏமார்ந்துப் போவீர்கள்.
அப்படிப்பட்ட உங்களுக்கு இதுவரை உங்கள் ராசியை நேருக்குநேர் பார்த்துக் கொண்டிருந்த குருபகவான் இப்போது 22.4.2023 முதல் 1.5.2024 வரை ராசிக்கு எட்டாவது வீட்டில் சென்று மறைகிறார். 8-ல் நிற்கும் குருவால் எல்லாம் காரியங்களும் தட்டிக்கொண்டே போகுமே, தெளிவில்லாமல் முடிவெடுக்க நேரிடுமே என்று கலங்காதீர்கள். உபய ராசியில் பிறந்த உங்களுக்கு குருபகவான் பாதகாதிபதியாவார். அப்படிபட்டவர் ராசிக்கு 8-ல் போய் மறைவதால் குருவால் ஏற்படும் கெடுபலன் குறைந்து நல்லதே நடக்கும்.
உங்கள் ராசிநாதனான புதனுக்கும் பகைவரான குரு 8-ல் மறைவதால் கணவன் மனைவிக்குள் வீண் விவாதங்கள் குறையும். அன்யோன்யம் அதிகரிக்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். ஆனால் ஏதாவது பிரச்சனையில் சிக்கிக் கொள்வோமோ, அவர் நம்மைப் பற்றி என்ன சொல்கின்றாரோ! இவர் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறாரோ! என்ற அச்சம் இருக்கும். திட்டமிட்ட பல வேலைகள் தாமதமாக போய் முடியும். சில விஷயங்களை அதிக செலவு செய்து முடிக்க வேண்டியது வரும். மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காமல் நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. சில காரியங்கள் முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகளும் துரத்தும். வறட்டு கௌரவத்திற்காக தடபுடலாக செலவு செய்வதை குறைத்துக் கொள்ளுங்கள். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்து வருந்தாதீர்கள். வாகனத்தை இயக்கும் போது கவனம் தேவை. நள்ளிரவு பயணங்களை தவிர்க்கப் பாருங்கள்.
குருபகவானின் பார்வைப் பலன்கள்
குருபகவான் உங்களது 2-ம் வீட்டை பார்ப்பதால் குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல் குழப்பங்களெல்லாம் முடிவுக்கு வரும். மகிழ்ச்சி தங்கும். வீண் சந்தேகம் தீரும். மனைவிவழி உறவினர்களால் ஆதாயமுண்டு. பணப்பற்றாக்குறையால் வீடு கட்டும் பணி பாதியிலேயே நின்று போனதே! இனி முழுமையடையும். ஆடை ஆபரணங்கள் சேரும். வெகுநாள்களாக ப்ரிஜ், வாஷிங் மிஷின் வாங்க வேண்டுமென்று நினைத்திருந்தீர்களே, இப்போது வாங்குவீர்கள். பல சிந்தனைகளை மனதிற்குள் போட்டுக் கொண்டு படுத்தால் தூக்கம் வராமல் தவித்தீர்களே! இனி ஆழ்ந்த உறக்கம் வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.
குருபகவான் உங்களது சுக ஸ்தானமான 4-ம் வீட்டைப் பார்ப்பதால் உடல் சோர்வு, அசதி, வீண்அலைச்சல், டென்ஷன் நீங்கும். தாயாருடன் அடிக்கடி மனஸ்தாபங்கள் வந்ததே, இனி பாசம் கூடும். அவர்வழிச் சொத்து கைக்கு வரும். தாய்மாமன் வகையில் உதவிகள் கிடைக்கும். அரைகுறையாக நின்று போன வேலைகளையெல்லாம் இனி விரைந்து முடிப்பீர்கள்.
குரு 12-ம் வீட்டைப் பார்ப்பதால் புண்ணியத் தலங்கள் சென்று வருவீர்கள். வெகுநாள்களாக இழுபறியில் இருந்து வந்த வழக்குகள் சாதகமாக முடியும். அரசாங்க விஷயங்களில் இருந்து வந்த பின்னடைவு இனி விலகும். உங்களைக் கண்டு ஒதுங்கிச் சென்றவர்களெல்லாம் இனி வலிய வந்து உறவாடுவார்கள். அடிக்கடித் தொந்தரவு தந்த பழைய வாகனத்தை மாற்றிவிட்டு, புதிய வண்டியில் வலம் வருவீர்கள். அக்கம்பக்கம் வீட்டாருடன் குடும்ப விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
22.4.2023 முதல் 23.6.2023 வரை மற்றும் 23.11.2023 முதல் 6.2.2024 வரை குருபகவான் அசுவனி நட்சத்திரத்தில் சஞ்சரித்துப் பலன்கொடுக்கும் இந்தக் காலக்கட்டங்களில் ஒரு பக்கம் அலைச்சல் இருந்தாலும் முன்னேற்றமும் உண்டு. சிறுசிறு விபத்துகள், பொருள் இழப்புகள் வந்து நீங்கும். ஆனால் பணவரவு குறையாது. புகழ், கௌரவம் கூடும். அரசால் ஆதாயம் உண்டு. முக்கிய பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். பூர்வீக சொத்து சிக்கல் ஒரு முடிவுக்கு வரும்.
23.6.2023 முதல் 22.11.2023 வரை மற்றும் 6.2.2024 முதல் 17.04.2024 வரை உங்கள் தனபாக்கியாதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சாரம் செய்வதால் இந்தக் காலக்கட்டத்தில் திடீர் வெற்றி, வாகனம், ஆடை, ஆபரணச் சேர்க்கை, வீடு வாங்குவது, கட்டுவது யாவும் உண்டாகும்.
17.4.2024 முதல் 1.5.2024 வரை குருபகவான் உங்களின் விரையாதிபதியாகிய சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1-ம் பாதத்தில் செல்வதால் அரசு விஷயங்களில் கவனம் தேவை. தந்தையாருக்கு மருத்துவச் செலவுகள் உண்டு.
குருபகவானின் வக்ர சஞ்சாரம்
11.9.2023 முதல் 20.12.2023 வரை குருபகவான் அசுவினி நட்சத்திரம் மற்றும் பரணி நட்சத்திரங்களில் வக்ர கதியில் சஞ்சரிக்க இருப்பதால் கொஞ்சம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. கணவன்-மனைவிக்குள் ஈகோ வந்து நீங்கும். அவ்வப்போது ஒரு வெறுமையை உணருவீர்கள். ஒருவித படபடப்பு, ஹார்மோன் பிரச்னை, ஈகோவால் கணவன்-மனைவிக்குள் சச்சரவு வந்து நீங்கும்.
வியாபாரம் : பணவசதி இல்லாததால் விரிவுபடுத்த முடியாமல் தவித்தீர்களே எத்தனையோ புதுத் திட்டங்கள் இருந்தும் செயல்படுத்த முடியாமல் திண்டாடினீர்களே... இனி இந்த நிலைமாறும். பண உதவி கிடைக்கும். தொழிலில் ஆர்வம் பிறக்கும். இடவசதியில்லாமல் இருந்த கடையை வேறிடத்திற்கு மாற்ற வேண்டி வரும். பழைய பாக்கிகளைக் கறாராகப் பேசி வசூலிப்பது நல்லது. விளம்பர யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை அதிகப்படியாக வரவழைப்பீர்கள். வேலையாட்களை அன்பாக நடத்தினாலும் சில நேரங்களில் டென்ஷன் படுத்துவார்கள். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை முறையே செலுத்தி விடுங்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடம் பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் நேரடியாகச் சொல்லிவிடுங்கள். ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
வேலை : தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்தும் கூட சிலர் உங்களை சீண்டிபார்த்தார்களே, எவ்வளவு உழைத்தும் உங்களைக் குறை சொல்லிக் கொண்டுதானே இருந்தார்கள். இனி அந்த நிலை மாறும். மேலதிகாரி இனி உங்கள் திறமையை அங்கீகரிப்பர். வெகுநாள்களாக எதிர்பார்த்த பதவியுயர்வு இனி தேடி வரும். சக ஊழியர்களிடம் அதிகாரிகளின் அந்தரங்க விஷயங்களைப் பற்றி பேச வேண்டாம். டிசம்பர், ஜனவரி மாதங்களில் புது வாய்ப்புகள் அமையும். திறமைக்கேற்றபடி பாராட்டு, பதவியுயர்வெல்லாம் தேடி வரும். கணினி துறையினர்களுக்கு வேலைபளு அதிகரிக்கத்தான் செய்யும். புது வேலைக்கு மாறும்போது யோசித்துச் செயல்படுங்கள்.
இந்த குருப்பெயர்ச்சி செலவுகளை அதிகமாக்கினாலும், ஓரளவு சொத்து சேர்க்கையையும், அலைச்சலையும் அதனால் ஆதாயத்தையும் தருவதாக அமையும்.
பரிகாரம்: செங்கோட்டையிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது புளியறை. சதாசிவமூர்த்தி என்ற திருப்பெயருடன் இறைவன் அருளும் தலம். இங்கே, சிவனாருக்கும் நந்திக்கும் இடையே தென்முகமாக அருளும் யோக தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வாருங்கள்; யோகம் உண்டாகும்.
No comments:
Post a Comment