Join THAMIZHKADAL WhatsApp Groups
சீர்திருத்தச் சிந்தனையோடு அடித்தட்டு மக்களின் நலனுக்காக அயராது போராடும் தனுசு ராசி அன்பர்களே.
பொதுவாக சமாதானத்தை விரும்பும் நீங்கள். சச்சரவு என வந்து விட்டால், சண்டைக் கோழியாக மாறிவிடுவீர்கள். பகுத்தறிவுச் சிந்தனை உள்ள நீங்கள், அனைத்திற்கும் ஆமாம் போட மாட்டீர்கள்.
அப்படிப்பட்ட உங்கள் ராசிக்கு இதுவரை சுகவீடான 4-ம் வீட்டில் அமர்ந்து உங்களை எந்த சுகங்களையும் அனுபவிக்க முடியாமல் தடுத்ததுடன், பலவிதங்களிலும் இழப்புகளையும், ஏமாற்றங்களையும் தந்த குருபகவான் 22.4.2023 முதல் 1.5.2024 வரை 5-ம் வீட்டில் அமர்ந்து அள்ளிக் கொடுக்கப் போகிறார்.
வார்த்தையால் வடிக்க முடியாத கஷ்டங்களை எல்லாம் அனுபவித்தீர்களே! பட்ட காலிலே படும் என்பதுபோல அடுக்கடுக்காக அதிர்ச்சிகளைச் சந்தித்தீர்களே! திறமை இருந்தும் சரியான சந்தர்ப்பச் சூழ்நிலை அமையாதலால் முடங்கிக் கிடந்தீர்களே, இனி எதிலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் எப்போது பார்த்தாலும் வீண் விவாதங்கள், சண்டை சச்சரவுகள் என்றே நாள்கள் நகர்ந்ததே, ஒரே வீட்டுக்குள் இருந்தாலும் எந்த ஒட்டும், உறவும் இல்லாமல் பிரிந்துதானே இருந்தீர்கள். அந்த அவல நிலையெல்லாம் இனி மாறும். வீட்டில் சந்தோஷம் குடிகொள்ளும்.
குழந்தை வரம் எதிர்பார்த்துக் காந்திருந்த தம்பதிகளுக்கு அழகும்,அறிவும் உள்ள குழந்தை பிறக்கும். பூர்வீகச் சொத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். தாயாருக்கு இருந்து வந்த மூட்டுவலி, முழங்கால் வலியெல்லாம் விலகும். சர்க்கரை நோயின் தாக்கம் குறையும். விலகிச் சென்ற நண்பர்கள், உறவினர்கள் இனி விரும்பி வந்து பேசுவார்கள். அவர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் முக்கியத்துவம் அளிப்பார்கள். நீண்ட நாளாகப் புதுப்பிக்கப்படாமலிருந்த குலதெய்வக் கோயிலை சொந்த செலவில் புதுப்பிப்பதுடன், உங்களின் பிராத்தனைகளையும் முடிப்பீர்கள். சில நேரங்களில் தனிமையில் தவித்தீர்களே! இனி எல்லோருடனும் மனம் விட்டுப் பேசுவீர்கள்.
குருபகவானின் பார்வைப் பலன்கள்
குருபகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் இதுவரை எதையோ இழந்ததைப்போல் இருந்த உங்கள் மனசு இனி நிம்மதியாகும். சோர்ந் முகம் மலரும். வாங்கிய கடனை அடைக்க முடியாமல் முழி பிதுங்கி நின்றீர்களே, இனி கொஞ்சம் கொஞ்சமாகப் பைசல் செய்வீர்கள். வாழ்க்கைத் துணைக்குத் தங்க ஆபரணம் வாங்கித்தருவீர்கள். வாடகை வீட்டிலிருந்த சிலர் சொந்தமாக வீடு கட்டிக் குடிபுகுவார்கள். கனவுத்தொல்லை, தூக்கமின்மை விலகும். தாய் மாமன், அத்தைவழியிலிருந்து வந்த கருத்துமோதல்கள் விலகும். வெளிவட்டாரத்தில் உங்களுக்கென்று தனி அந்தஸ்து கிடைக்கும். பெரிய பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சொந்தச் செலவில் ஊர்த் திருவிழாக்களை நடத்துவீர்கள். நவீன ரக வண்டியில் உலாவருவீர்கள்.
குருபகவான் உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் தந்தையாருடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். அவர்வழி சொந்தங்களால் ஆதாயம் உண்டு. அடகிலிருந்த நகைகளை மீட்பீர்கள். நாடாளுபவர்கள், தொழிலதிபர்களின் நட்பால் சில காரியங்களைச் சாதிப்பீர்கள். நெடுநாள்களாகச் செல்ல வேண்டுமென நினைத்துக் கொண்டிருந்த, வெளிமாநில புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
உங்களின் லாப வீடான 11-ம் வீட்டை குரு பார்ப்பதால் மூத்த சகோதரர், சகோதரிகளுடன் இருந்து வந்த பனிப்போர் நீங்கி, பாசமழை பொழிவார்கள். வீட்டிற்கு வேண்டிய டி.வி, ப்ரிட்ஜ் புதுசு வாங்குவீர்கள். இழுபறியில் இருந்த வழக்குகளில் சாதகமான நிலை ஏற்படும். வேலையில்லாமல் தவித்தவர்களுக்குப் பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். தர்மக் காரியங்களில் ஆர்வம் பிறக்கும். ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களுக்கு உதவுவீர்கள். அண்டை அயலாருடன் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் மறையும்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
22.4.2023 முதல் 23.6.2023 வரை மற்றும் 23.11.2023 முதல் 6.2.2024 வரை அசுவனி நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சாரம் செய்து பலன் தர இருப்பதால் இந்தக் காலக்கட்டத்தில் மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு கொஞ்சம் அலைச்சலும், ஏமாற்றங்களும் இருக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்கள் உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் நடந்து கொள்வார்கள். ஆனால் எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி முடியும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். சொத்து வாங்க வங்கிக்கடன் கிடைக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வீடு கட்டுவீர்கள். உடல் பருமனைக் குறைப்பீர்கள். யோகா, தியானம் இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும்.
23.6.2023 முதல் 22.11.2023 வரை மற்றும் 6.2.2024 முதல் 17.4.2024 வரை பரணி நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சாரம் செய்யும் இந்த நாள்களில் பூராடம் நட்சத்திரக்காரர்கள் புதியவர்களை நம்பிப் பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்ப அந்தரங்க விஷயங்களைப் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். ஆனால் புதிய திட்டங்கள் நிறைவேறும். சவாலான காரியங்களைக்கூட எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். வீடு மாறுவீர்கள். கல்யாணம் கூடி வரும்.
17.4.2024 முதல் 1.5.2024 வரை குருபகவான் உங்கள் பாக்கியாதிபதியான சூரியனின் நட்சத்திரமான கார்த்திகை 1-ம் பாதத்தில் சஞ்சாரம் செய்யும் இந்த நாள்களில் உங்களுக்குப் புதிய வேலை கிடைக்கும். அரசால் ஆதாயமடைவீர்கள். திடீர் பணவரவு உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். தந்தைவழி சொத்துகள் வந்து சேரும்.
குருபகவானின் வக்ர சஞ்சாரம்:
11.9.2023 முதல் 20.12.2023 வரை குருபகவான் அசுவினி மற்றும் பரணி நட்சத்திரங்களில் வக்ர கதியில் செல்வதால் சின்னச் சின்ன பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். வாகனப் பழுது, பணப்பற்றாக்குறை வந்து செல்லும். வீண் விரையம், ஏமாற்றம், அல்சர், கை, கால், மூட்டு வலி, யாரை நம்புவது என்கிற குழப்பம் வந்து நீங்கும்.
வியாபாரம் : எதைச் செய்தாலும் நஷ்டங்கள்தானே மிஞ்சியதே, இனி அனுபவ அறிவால் அவற்றையெல்லாம் சரிசெய்வீர்கள். புதிது புதிதாக வந்த போட்டியாளர்களுக்கு மத்தியில் ஈடுகொடுக்க முடியாமல் திணறினீர்களே... இனி அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் உங்களின் அணுகுமுறையை மாற்றுவீர்கள். கடையை விசாலமாக்குவீர்கள். அதிரடியான சலுகைகளையும் அறிவிப்பீர்கள். உணவு, தங்கும் விடுதி, கமிசன், எண்டர்பிரைஸ், துணி வகைகளால் லாபமடைவீர்கள். ஜூன், ஜூலை மாதங்களில் புதிய முதலீடு செய்வீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். அடிக்கடி விடுப்பில் சென்ற வேலையாட்கள் இனி பொறுப்பாக நடந்து கொள்வார்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரிகள் சங்கத்தில் பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்
வேலை : நாலாப்புறமும் பந்தாடப்பட்டீர்களே... உழைத்தும் அதிகாரிகளை திருப்திபடுத்த முடியாமல் அல்லாடினீர்களே... அந்த நிலை இனி மாறும். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைக் குறை சொல்லிக் கொண்டிருந்தவர்கள் இனி மதிப்பார்கள். வேலைச்சுமை குறையும். மேலதிகாரியுடனான பனிப்போர் நீங்கும். ஜூன், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நீண்டநாளாக எதிர்பார்த்த பதவி உயர்வு தேடி வரும். கணினித் துறையினர்களுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி விரக்தி, வேதனையிலிருந்து உங்களை விடுவிக்க வைப்பதுடன் பணவரவையும், பதவியையும் தருவதாக அமையும்.
பரிகாரம்: திருச்சி சமயபுரம் டோல்கேட்டுக்கு அருகில் உள்ளது பிச்சாண்டார் கோயில். மும்மூர்த்தியரும் அருளும் தலம் இது. இங்கு சென்று ஏழு குருபகவான்களை தரிசித்து வழிபட்டு வாருங்கள்; வியாபார விருத்தியுடன் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
No comments:
Post a Comment