Join THAMIZHKADAL WhatsApp Groups
தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேராததால் தமிழக அரசுக்கு ரூ.670 கோடி கூடுதல் வட்டிச்செலவு ஏற்பட்டுள்ளதாக இந்திய தணிக்கைத்துறை தலைவர் குற்றச்சாட்டி உள்ளார்.
நேற்று வெளியிடப்பட்ட தமிழக சட்டசபையில் இந்திய தணிக்கைத்துறை தலைவரின் அறிக்கைகளில் இந்த குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தணிக்கைத்துறை தலைவரின் அறிக்கைகள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிந்த மாநில நிதிநிலை மீதான அறிக்கையில், தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேராததால் தமிழக அரசுக்கு ரூ.670 கோடி கூடுதல் வட்டிச்செலவு ஏற்பட்டுள்ளதாக இந்திய தணிக்கைத்துறை தலைவர் குற்றச்சாட்டினார்.
நேற்று சட்டசபையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது: " கடந்த 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டம் தொடங்கப்பட்டிருந்தது. 19 ஆண்டுகள் ஆகியும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் தமிழ்நாடு அரசு சேரவில்லை. அதற்கான நிதி மேலாளரும் நியமிக்கப்படவில்லை.
புதிய ஓய்வூதிய திட்ட பங்களிப்புத்தொகையை தொடர்ந்து எல்.ஐ.சி. மற்றும் கருவூல பத்திரங்களில் அரசு முதலீடு செய்து வந்தது. எல்.ஐ.சி. மற்றும் கருவூல பத்திர முதலீடுகளில் இருந்து வரும் ஆதாயம், சந்தாதாரர்களின் வருங்கால வைப்புநிதிக்காக ஈடாக வழங்கிய வட்டி சதவீதத்தைவிட மிகக் குறைவாக இருக்கிறது. எனவே இதில் ஏற்படும் வேறுபாட்டை அரசு ஏற்றதால், தவிர்த்திருக்கக்கூடிய செலவு ஏற்பட்டது.
அந்த வகையில் வேறுபாட்டு வட்டித்தொகையாக ரூ.670.36 கோடியை அரசு நடப்பாண்டில் செலுத்தியது. தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்து நிதி மேலாளரை நியமித்திருந்தால் இந்த வட்டியை செலுத்தத் தேவை ஏற்பட்டிருக்காது. மேலும் தற்போது அரசு வழங்கும் ஜி.பி.எப். வட்டி சதவீதத்தைவிட கூடுதல் சதவீத வட்டி சந்தாதாரர்களுக்கு கிடைத்திருக்கும். சந்தாதாரர்களுக்கு செலுத்தவேண்டிய கூடுதல் வட்டியால், மாநில வருவாய் வகை செலவினத்தில் இது தாக்கத்தை ஏற்படுத்தும்.
இதுகுறித்து அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் விளக்கம் அளித்துள்ளார். அதில், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு தனது அறிக்கையை 27.11.2018 அன்று வழங்கியது. அது அரசின் பரிசீலனையில் இருக்கிறது. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை ஆணையத்தின்கீழ், நிதி மேலாளர் மூலமாக நிதியை முதலீடு செய்வது தொடர்பாக அரசு கொள்கை முடிவு எடுக்கவில்லை" இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனிடையே சென்னையில் உள்ள தணிக்கை பொது இயக்குனர் அலுவலகத்தில், மாநில முதன்மை கணக்காயர் (தணிக்கை-1) நெடுஞ்செழியன், தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான கணக்காயர் (தணிக்கை - 2) ஆனந்த் ஆகியோர் கூட்டாக நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறும் போது, 2018-22 காலகட்டத்தில் வசூலிக்கப்பட்ட மின்சாரம் மீதான வரியில், 70 சதவீதம் அரசுக் கணக்குகளில் வரவு வைக்கப்படவில்லை என்றார்கள்.
மேலும் அவர்கள் கூறும் போது, வசூலிக்கப்பட்ட வரியை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டான்செட்கோ) தன்வசமே வைத்துக் கொண்டு தன்னுடைய செலவுக்காக பயன்படுத்தியுள்ளது. இது சட்டப்படி பெரும் குற்றம் என்றார்கள் மானியமாக அரசு வழங்கிய ரூ.803.29 கோடிக்கான பயன்பாட்டு சான்றிதழ்களையும் கொடுக்கவில்லை என்றும் பொறுப்புடைமையை உறுதி செய்யும் விதிகளை துறை அலுவலர்கள் பின்பற்ற தவறியதை இது காட்டுகிறது என்றும் கூறினார்கள்.
மானிய உதவி வழங்கிய நோக்கத்தை முறியடிப்பதாகவும் உள்ளதாகவும், ரூ.317.81 கோடி அளவிலான தற்காலிக முன்பணங்கள், கருவூலத்திலிருந்து பெறப்பட்டு பல ஆண்டுகளாக நிலுவையிலேயே உள்ளது என்றும் தெரிவித்தனர். 8 வருடமாக இந்த பணத்திற்கான கணக்கினை அரசிடம் கொடுக்கவில்லை என்று குற்றம்சாட்டிய அவர்கள், மின்சாரம் மீதான வரியாக மொத்தம் ரூ.5,039.44 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்றும் இதில், ரூ.3,527.13 கோடியை அரசிடம் கட்டாமல் தங்கள் கையிலேயே வைத்துள்ளார்கள் என்றும் தணிக்கை அதிகாரிகள் கூறினார்கள்.
No comments:
Post a Comment