பொதுப்போக்குவரத்துப் பயணங்களுக்குக் கிளம்பும்போது, சில்லறைத் தட்டுப்பாடு பெரிய பிரச்னையாக இருக்கும்.
அதற்குத்தான் மாதாந்திர அட்டை எனும் டோக்கன் சிஸ்டம் உண்டு. ஆனால், ரயிலுக்குத் தனி; பஸ்ஸுக்குத் தனி; மெட்ரோவுக்குத் தனி என்ற நடைமுறை இருந்து வருகிறது.
இனிமேல் ஒரே அட்டையில் மெட்ரோ - எலெக்ட்ரிக் ரயில் - பஸ் என மூன்றிலும் பயணிக்கும்படியான ஒரு கார்டை அறிமுகம் செய்துள்ளது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்.
இதற்குப் பெயர் National Common Mobility Card (NCMC). அல்லது சிங்காரச் சென்னை கார்டு. இதை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுடன் கூட்டு வைத்துச் செய்துள்ளது சென்னை மெட்ரோ நிர்வாகம்.
இந்தச் சிங்காரச் சென்னை கார்டை வாங்கி டாப் அப் செய்துவிட்டு - மெட்ரோ - எலெக்ட்ரிக் ரயில் - பஸ் என மூன்றிலும் மாறி மாறிப் பயணிக்கலாம். இப்போதைக்கு கோயம்பேடு, சென்ட்ரல், விமானநிலையம், உயர்நீதிமன்றம், ஆலந்தூர், திருமங்கலம் என்று சில ஸ்டேஷன்களில் இந்த கார்டை பர்ச்சேஸ் செய்து கொள்ளலாம். இதைக் குறைந்தபட்சமாக 100 ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 2,000 ரூபாய் வரை டாப் அப் செய்து கொண்டு பயணிக்கலாம். இந்த கார்டைப் பெறுவதற்கு ஆதார்/லைசென்ஸ் என ஏதாவது ஒரு ஐடி புரூஃப் அவசியம்.
''இதை ஒரு மல்ட்டி பர்ப்பஸ் கார்டு ஆகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்! இந்த Rupay NCMC கார்டுகள், உங்கள் எஸ்பிஐ வங்கிக் கணக்குடன் லிங்க் செய்யப்படும். அதாவது, இதை நீங்கள் டெபிட் கார்டு ஆகவும் பயன்படுத்திக் கொண்டு, சூப்பர் மார்க்கெட்கள் போன்ற இடங்களிலும் இதை ஸ்வைப் செய்து பொருட்களைப் பர்ச்சேஸ் செய்து கொள்ளலாம். அதேபோல், டிரான்ஸ்போர்ட் சிஸ்டத்தைப் பொருத்தவரை ஒரு வேலட் ஆகவும் இது செயல்படும்! மேலும், பொதுப்போக்குவரத்துப் பயன்பாட்டில் உள்ள சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக இப்படி ஒரு முயற்சியை எடுத்திருக்கிறோம்!'' என்கிறார், ராஜேஷ் சதுர்வேதி - சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் இயக்குநர்.
இந்த சிங்காரச் சென்னை கார்டை ஆன்லைனிலும் பெற்றுக் கொள்ளலாம். https://transit.sbi/swift-eform/custCardLink?cardLink=cmrl என்ற இணையப் பக்கத்துக்குள்ளே போய், உங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களைப் பதிவு செய்து சப்மிட் செய்து கொண்டால், உங்கள் கார்டு ரெடி. இதை வைத்து மும்பை, பெங்களூரு, டெல்லி உள்பட இந்தியாவில் உள்ள அனைத்து மெட்ரோக்களிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இப்போதைக்கு இந்த கார்டை வைத்து மெட்ரோவில் மட்டும் பயணம் செய்து கொள்ளலாம். மின்சார ரயில்களில் அறிமுகம் செய்ய 2 மாதங்களும்; பஸ் போக்குவரத்தில் இந்த வசதியைக் கொண்டு வர 10 மாதங்களும் தேவைப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.
No comments:
Post a Comment