Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, April 25, 2023

ஹெட்போன் ஆபத்து.அலெர்ட் ப்ளீஸ்!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

அவசரப் பயன்பாட்டுக்காக கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்கள் இன்று அத்தியாவசியமாக அனைவரிடத்திலும் மாறிவிட்டது .

உள்ளங்கையில் உலகத்தைக் கொண்டு வந்தாலும், இது தரும் ஆபத்தும் அதிகமே. அந்த வகையில், ஸ்மார்ட் ஃபோன்கள் பயன்பாடு மற்றும் தனிப்பட்ட ஆடியோவின் ஒலி அலைகள் காரணமாக 1.1 பில்லியன் இளைய தலைமுறையினர்கள் காது கேளாத அபாயத்தில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காதுகேளாமை பிரச்சனை மன ஆரோக்கியம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வரை பாதிப்பை உண்டாக்கி வருகிறதாம் சமீபகாலமாக..

உதாரணமாக, தலையை குனிந்தபடி செல்போனை பார்த்துக் கொண்டே இருப்பதும், காதில் ஹெட் போன் மாட்டிக்கொண்டே இருப்பதும், கண், காது மற்றும் மூளை மூன்றிலும் பாதிப்பை உண்டாக்குகிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ஹெட் போன், ஹியர் பட்ஸ் போன்றவற்றை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் காது, மூக்கு, தொண்டை நிபுணர் வி.ஜி. அஸ்வின்.

'இன்றைய சூழ்நிலையில், இளவயதினர் நாள் முழுக்க ஹெட்போன் பயன்படுத்திவருவதை கண்கூடாகவே பார்க்கிறோம். அதிலும், காதுகளில் ஹெட்ஃபோன் மாட்டிக்கொண்டு பேசுவதை காட்டிலும் சத்தமாக பாட்டு கேட்பதை பலரும் விரும்புகிறார்கள். ஆனால், தொடர்ந்து அதிக நேரம் பாட்டு கேட்கும் போது செவிப்புலன் இழப்பு அல்லது டின்னிடஸ் ஏற்படலாம். மேலும் இது தொடர்ந்து நீடிக்கும் போது காதுகளின் உணர்ச்சி உயிரணுக்களின் நிரந்தர சேதத்துக்கு வழிவகுக்கக்கூடும். இவை மீண்டும் மீட்க முடியாமலும் போகலாம். இது காது கேளாமை வரை கொண்டு சென்றுவிடும் ஆபத்தும் உள்ளது.

இயல்பாக செல்ஃபோனை நேரடியாக காதில் வைத்து பேசாமல் ஹெட் போன் மூலமாக பயன்படுத்துவதால் கதிர்வீச்சு பாதிப்பு குறைய செய்யும். என்றாலும் ஹெட் ஃபோனை மட்டுமே தொடர்ந்து பயன்படுத்தினாலும் அது சேதத்தை உண்டாக்கும். ஹெட்ஃபோன் பயன்பாடு அளவோடு இருக்க வேண்டும். காதுக்குள் 90 டெசிபல் அளவுக்கு ஒலியை ஹெட்ஃபோன் அனுப்புவதால் காதுகேளாமைக்கு காரணமாகிறது.

5 நிமிடங்கள் இடைவிடாமல் 100 டெசிபல் ஒலியை கேட்டால் மிகவும் சிரமம். இவ்வாறு தொடர்ந்து கேட்கும்போது எவ்வளவு பாதிப்பை உண்டாக்கும் என்று அறிந்துகொள்ளுங்கள். நமது காதுகள் மூன்று பகுதிகளால் ஆனவை. இது ஒலிகளை செயலாக்கும் வேலைகளை செய்பவை. வெளிப்புற காது, நடுத்தர காது மற்றும் உள்காது போன்றவை ஆகும். உள்காது கோக்லியா என்று அழைக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதி சிறியளவிலான முடி செல்களை கொண்டிருக்கிறது. இந்த முடி செல்கள் மூளைக்கு ஒலி செய்திகளை அனுப்ப உதவுகிறது. செய்திகள் சத்தம் அதிகமாக உரக்க இருக்கும் போது அது முடி செல்களை சேதப்படுத்திவிடக்கூடும்.

இதனால் செய்திகளை மூளைக்கு அனுப்பும் கோக்லியா செயல்பட முடியாமல் போகிறது.பொதுவாக உடலில் மற்ற பகுதிகளில் ஏற்படும் சேதம் போல அல்ல உள்காது சேதம். உள்காது ஒருமுறை சேதமாகிவிட்டால், பின்னர், குணமடையாது. காலப்போக்கில் செவிப்புலன் மேலும் மோசமடையக்கூடும். மேலும், செவிப்புலன் இழப்பு என்பது படிப்படியாக நடப்பதால் அவை தீவிரமாகும் வரை பாதிப்பு இருப்பதே தெரியாது.

ஹெட் ஃபோன் மற்றும் ஹியர் பட்ஸ் பயன்படுத்துவதனால் ஏற்படும் பாதிப்புகள்

ஹெட் ஃபோன், ஹியர்பட்ஸ் அதிகளவில் பயன்படுத்தும்போது, உள்காதில் உள்ள அவுட்டர் ஹேர் ஸ்பேஸ் , இன்னர் ஹேர் ஸ்பேஸ் பாதிக்கப்படும். உள்காதில் உள்ள ஹேர் செல்களும் பாதிக்கும்.இது கேட்கும் ஒலியின் அளவை பொருத்து ஒவ்வொருவருக்கும் மாறுபடும். அதாவது, எவ்வளவு நேரம் ஒலியைக் கேட்கிறார்கள், எவ்வளவு ஒலி அளவில் கேட்கிறார்கள் என்பதை பொருத்து, பாதிப்புகள் கூட குறைய இருக்கும்.

அதுபோன்று, திடீரென்று அதிக ஒலியை கேட்க நேரிடும்போது, கேட்கும் திறன் நேரடியாக பாதிக்கக் கூடும் அல்லது நீண்ட நாட்களாக ஒலியை கேட்டுக் கொண்டே இருப்பதால் உள்காதில் உள்ள ஹேர் செல்கள் பாதிக்கப்பட்டு பாதிப்பு ஏற்படலாம்.பொதுவாக, மெல்லிய ஒலியை குறைந்த அளவில் கேட்டுக் கொண்டு இருப்பவர்களுக்கு, பெரியளவில் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. ஏனென்றால், ஒரு அளவு வரை அவரவர் உடல் தானாகவே சரி செய்து கொள்ளும். அதுவே, அதிக அளவில், அதிக நேரம் கேட்டுக் கொண்டிருந்தால் நிரந்தர பாதிப்புகள் ஏற்படும்.

ஹெட் ஃபோன் பயன்படுத்தும் கால அளவு

சிலருக்கு 7 மணி நேரம் தொடர்ந்து கேட்டாலே காது பாதிப்பு அடைந்துவிடும். சிலருக்கு 9 மணி நேரம் வரை கேட்டாலும் பெரிய பாதிப்புகள் இருக்காது. ஆனால் குறைந்தபட்சம், ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கு மேல் சுமார் 85 டெசிபல் ஒலி அளவை தாண்டும்போதுதான் பாதிப்புகள் தொடங்குகிறது. முதலில் கேட்கும் திறனை பாதிக்கும்.
எனவே, குறைந்த அளவே ஹெட் ஃபோன் பயன்படுத்தும்போது பெரிய பாதிப்புகள் ஏற்படாது.

பாதிப்புகள்

பொதுவாக பெண்களை விட, ஆண்களே அதிகளவில் பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஏனென்றால், பெண்களுக்கு ஈஸ்டோஜென் என்ற ஹார்மோன் அதிகளவில் சுரப்பதால், அவர்களுக்கு பெரிய பாதிப்புகள் ஏற்படுவதில்லை.

ஆரம்பநிலை பாதிப்பு என்பது மார்க்கெட் போன்ற இரைச்சல் நிறைந்த பொது இடங்களில் ஒருவர் நம்மிடம் பேசும்போது, கேட்பதிலும், புரிந்து கொள்வதிலும் சிரமம் ஏற்படும். அடுத்தகட்டமாக, காதில் இரைச்சல் கேட்கும். யாராவது சத்தமாக பேசினால், எரிச்சல் நிலை உருவாகும். காது கேட்கும் திறன் குறையும்போது, இது நாளடைவில் மனஅழுத்தத்தை ஏற்படுத்தி மற்றவர்களோடு பழகுவதை நிறுத்திவிடுவார்கள். பின்னர், படிப்படியாக ஞாபகத்திறன் குறைந்துவிடும். சிலருக்கு அதிகளவிலான சத்தத்தை கேட்கும்போது, திடீரென்று காது கேட்காமல் போய்விடும். இதனை அக்வஸ்டிக் ட்ராமா (Acoustic trauma) என்று சொல்கிறோம்.

இதுவே, தொடர்ந்து ஒரு மாதமோ, இரண்டு மாதமோ கேட்பதனால் ஏற்படும் பாதிப்பை நாய்ஸ் இன்டியூஸ்ட் ஹியேரிங் லாஸ் (noise-induced hearing loss) ஏற்படும்.

தற்காத்து கொள்ளும் வழிகள்

இசை நிகழ்ச்சிகள் (கான்சர்ட்ஸ்) போன்ற நிகழ்ச்சிகளுக்கு சென்று அங்கே எழுப்பப்படும் அதிகப்படியான ஒலி அளவை கேட்பதனால் கேட்கும் திறன் பாதிக்கப்பட்டு நிறைய பேர் வருவதை அவ்வப்போது பார்க்கிறோம். இது போன்ற பாதிப்புகளை அந்த நிகழ்ச்சிகளை தவிர்ப்பது மூலமும் நாமே தற்காத்துக் கொள்ள முடியும்.

கேட்கும் ஒலியின் அளவை குறைக்க குறைக்க நாம் நம் காதுகளை தற்காத்துக் கொள்ள முடியும். இசைப் பிரியர்களுக்கு மற்றொரு மாற்று வழி என்றால், காதுக்குள் வைக்கும் ஹெட் ஃபோன், ஹியர் பட்ஸ் போன்றவற்றை தவிர்த்துவிட்டு, ஆரம்ப காலத்தில் வந்த ஹெட் செட் மாதிரி அதாவது, தலைக்கு மேல் கம்பி போன்று வந்து காதுகளுக்கு வெளியே காதுகளை மறைப்பது போன்ற டிரம் இருக்கும் அல்லவா. அந்த ஹெட் செட் போட்டு கேட்கலாம். அதே சமயம், ஒலியின் அளவை குறைத்து வைத்தே கேட்க வேண்டும்.

நாய்ஸ் கேன்சலேஷன் ஹியர் ஃபோன் (noise cancellation earphone) என்று இப்போது கிடைக்கிறது. இதனை பயன்படுத்தும்போது, அது வெளிப்புற சத்தங்களை குறைத்துவிடும். இதன்மூலம் ஹியர் ஃபோனின் ஒலி அளவை நாம் ஓரளவு குறைத்து வைத்தே கேட்க முடியும். இதன்மூலம் காதின் பாதிப்பு ஓரளவு குறையும்.பொதுவாக இரைச்சல் நிறைந்த ஃபேக்டரி, இண்டஸ்ட்ரிஸ், மிஷினரி போன்ற பணிகளில் இருப்பவர்களுக்கு காது கேளாமை பிரச்னை இயல்பாகவே இருக்கும்.

இதனை தவிர்ப்பது சிரமம். இவர்கள் என்ன செய்யலாம் என்றால், ஹியர் ப்ளக்ஸ், ஹியர் மக்ஸ் போன்றவற்றை கட்டாயமாக பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் ஒலியின் அளவை ஓரளவு தவிர்த்துக் கொள்ள முடியும். மேலும், இவர்கள், 3 மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது 6 மாதத்திற்கு ஒருமுறையோ தொடர்ச்சியாக காதுகளை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். அவர்களது கேட்கும் திறனை கண்டறிந்து கொள்ள வேண்டும். அதுபோன்று இவர்களுக்கு ஹியர் ப்ளக்ஸ், ஹியர் மக்ஸ் தொடர்ந்து அணிந்து கொள்ள கவுன்சிலிங் கொடுக்க வேண்டும்.

காது கேட்கும் திறன் குறையும் போது மற்றவர்கள் நம்முடன் பேசும்போது கத்தி கத்தி பேசுவார்கள். அப்படி பேசும்போது, ஒரு வித எரிச்சல் உண்டாகும். இதுவே, நாளடைவில் மன அழுத்தத்தை உருவாக்கி, சமூகத்துடன் பழகும் பழக்கம் குறைய தொடங்கும்.

எனவே, ஹெட் ஃபோன் பயன்படுத்துவது குறித்து மக்களுக்கு கட்டாயம் விழிப்புணர்வு வர வேண்டும். இல்லை என்றால் வருங்காலங்களில், இளம் வயதிலேயே காது கேளாமை பிரச்னை அதிகரித்துவிடும். இதற்காக, பள்ளி , கல்லூரிகளில் அவ்வப்போது விழிப்புணர்வு முகாம்கள் நடத்த வேண்டும். ஹெட் ஃபோனும் ஹியர் பட்ஸ் எந்தவிதத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை இளம் தலைமுறையினர் கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டும். காதுகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்' என்றார்.

தொகுப்பு : ஸ்ரீதேவி குமரேசன்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News