Join THAMIZHKADAL WhatsApp Groups
துணி துவைப்பது, அம்மி, ஆட்டுரலில் அரைப்பது, பாத்திரங்கள் துலக்குவது, அறைகள் சுத்தம் செய்வது என எல்லாவற்றுக்குமே இயந்திரங்களை பயன்படுத்த தொடங்கிவிட்டோம் அல்லது பணியாளர்களை வைத்துக் கொள்கிறோம்.
ஆண், பெண் இருவரும் வேலைக்கு செல்லும் நிலையில் இதை தவிர்க்க முடிவதில்லை என்பதும், இதனால் உடலுழைப்பு குறையும் என்பதும் எதார்த்தம் தான். பணியிடத்தில் 8 மணிநேரம் அமர்ந்து கொண்டே வேலை பார்ப்பதால் உடலியக்கம் குறைந்து , அதன்பின் உடல் பருமன் அதிகரிப்பது முதல் சர்க்கரை வியாதி வரை பல்வேறு உடல்நல பாதிப்புகளை நாம் சந்திக்க நேரிடுகிறது.
இந்த சூழ்நிலையில் நேரமும் வாய்ப்பும் கிடைக்கும் போதெல்லாம் வீட்டு வேலைகளில் ஈடுபடுவது உங்கள் உடல்நலத்தையும் மனநலத்தையும் நன்கு பராமரிப்பதுடன் உங்கள் குடும்ப பிணைப்பையும் வலுவாக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். உடல் எடையை பராமரிக்க உங்கள் உடல் எடையில் 1 கிலோ குறைக்க விரும்பினால் உங்கள் வேலைகள் மூலமோ அல்லது உடற்பயிற்சி மூலமோ வாரத்துக்கு சுமார் 3850 கலோரி, அதாவது தினசரி 550 கலோரி சக்தியை கூடுதலாக செலவிட வேண்டும்.
உடற்பயிற்சிகள் செய்யும்போது சக்தி வேகமாக செலவழிக்கப்படும். ஆனால் வீட்டு வேலைகள் செய்யும் போது மிதமான வேகத்தில் தான் சக்தி செலவாகும். ஒவ்வொரு வீட்டு வேலையும் ஒவ்வொரு விதத்தில் உடலுக்கு பயிற்சியாகிறது. அதில் சில குறிப்பிட்ட வேலைகளை இங்கு பார்க்கலாம்.சமையலறையை சுத்தம் செய்தல் ஸ்டவ்வை சுத்தம் செய்வது, மேடையை, ஷெல்ஃப்களை துடைப்பது போன்றவை கை தசைகளுக்கு நல்ல பயிற்சியாகும்.
அதேபோல், பாத்திரங்கள் கழுவுவது முன்கை மற்றும் விரல்களுக்கு நல்ல பயிற்சியாகும்.துணி துவைத்தல்பழைய பாணியில் துணிகளை துவைப்பது போன்ற அருமையான உடற்பயிற்சி வேறில்லை. அந்த முறையில் துணிகள் துவைக்க போதிய நேரம் இல்லையெனில், சில வேலைகளை மட்டும் அலசுதல், காயப்போடுதல், மடித்தல் போன்ற வேலைகளை செய்யலாம்.
துணிகளை அலசும் போது அடிக்கடி குனிய வேண்டியிருக்கும், துணிகளை பிழியும்போது கைகள் வலுவாகும், துணிகளை கொடியில் காயப்படும் போது உடல் வளைந்து கொடுக்கும், அடித்து துவைத்தல் என எல்லாவற்றையும் செய்வது ஒட்டுமொத்த உடலையும் வலுவாக்கும்.
தோள்பட்டை, கழுத்து, உடலின் மேற்பகுதி தசைகளுக்கு வேலை கொடுக்க அயர்னிங் சரியான பயிற்சியாகும்.கதவு, ஜன்னல்களை துடைத்தல் கதவுகள், ஜன்னல்களை சுத்தப்படுத்தும் வேலை கைகளுக்கு நல்ல பயிற்சி அளிப்பதுடன், உடலை வளைத்துக் கொடுக்க செய்யும்.
உயரமான பகுதி எட்டவில்லை என்றால் ஸ்டூலைப் பயன்படுத்த வேண்டும். ஸ்டூலின் மீது ஏறி இறங்குவது கூட உங்கள் கால் தசைகளை வலுவாக்கும்.வாகனங்களை கழுவுதல் கார், பைக், சைக்கிள் போன்ற நம் வீட்டில் பயன்படுத்தும் வாகனங்களை கழுவுவது ஒரு நல்ல உடற்பயிற்சி. காரின் கூரையை எட்டி துடைப்பது முதல் வாகனங்களின் டயர்களை குனிந்து கழுவுவது வரை உடலுக்கு பயிற்சியாகிறது.
கடைசியாக தண்ணீரை ஊற்றிக் கழுவ ஒஸ் பயன்படுத்துவதற்கு பதிலாக, டப்பில் நீரை நிரப்பி, மக்கில் எடுத்து நாமே தண்ணீரைத் தெளிக்கலாம்.பிற வேலைகள் இவை தவிர சமைத்தல், பொருட்களை துடைத்து அடுக்குதல், உணவுப் பொருட்களை தயார் செய்தல், தோட்டவேலை, குழந்தை பராமரிப்பு, ஒட்டடை அடித்தல் என உங்கள் உடலை வலுவாக்க உதவும் ஏராளமான வீட்டு வேலைகள் இருக்கின்றன.
வீட்டில் வேலைகள் செய்யாமல், அதே பலன்களுக்காக காசு கொடுத்து உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்பவர்கள் இதை சிந்திக்க வேண்டும். அதே நேரத்தில் இதய-நுரையீரல் செயல்திறனை அதிகரிக்கும் கார்டியோ-வாஸ்குலர் பயிற்சிக்கு வீட்டு வேலைகள் இணையாகாது. பொதுவாக ஆரோக்கியமாகவும், வளைந்துக்கொடுக்கக் கூடியதாகவும், வடிவாகவும் உடலை வைத்துக்கொள்ள விரும்புவர்களுக்கு இவை உதவும். இது ஆண்கள், பெண்கள் இருவருக்குமே பொருந்தும்.
No comments:
Post a Comment