Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழகத்தில் 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 19) வெளியாகின்றன.
தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13 முதல் ஏப். 5-ம் தேதி வரை நடத்தப்பட்டது. தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 7.70 லட்சம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர்.
அதேபோல், 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப். 6 முதல் 20-ம்தேதி வரை நடத்தப்பட்டது. தமிழகம், புதுச்சேரியில் சுமார் 9.4 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினர்.
தொடர்ந்து, 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் ஏப். 15-ல் தொடங்கி மே 4-ம் தேதியுடன் நிறைவடைந்தன. அதைத்தொடர்ந்து, மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட இதர பணிகளும் முடிக்கப்பட்டுவிட்டன.
இதற்கிடையே, 10-ம் வகுப்புக்கு மே 17-ம் தேதியும், 11-ம் வகுப்புக்கு மே 19-ம் தேதியும் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று, இவ்விரு தேர்வு முடிவுகளும் ஒரே நாளில், மே 19-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி, 10, 11-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் சென்னை டிபிஐ வளாகத்தில் நாளை வெளியிடப்பட உள்ளன. 10-ம் வகுப்பு முடிவுகள் காலை 10 மணிக்கும், பிளஸ்-1 முடிவுகள் மதியம் 2 மணிக்கும் வெளியாகும். இந்த தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகளில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.
இதுதவிர, பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும் தேர்வு முடிவுகளை அறியலாம். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் மற்றும் அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளைப் பார்த்துக் கொள்ளலாம்.
இதுதவிர, பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்களுக்கான தேர்வுமுடிவுகள், அவர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் அனுப்பி வைக்கப்படும் என்று தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment