Join THAMIZHKADAL WhatsApp Groups
வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 30ம் தேதிக்குள் தங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தி வரவு வைத்துக் கொள்ளலாம் என்றும் 2000 ரூபாய் நோட்டுகளை ஒப்படைத்து விட்டு வேறு ரூபாய் நோட்டுகளை வாங்கிக் கொள்ளலாம் என்றும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் பொதுமக்களுக்கு 2,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி பணமதிப்பு நீக்கம் செய்துவிட்டதா என்று மக்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மேலும், செப்டம்பர் 30-ம் தேதிக்குப் பிறகு 2,000 நோட்டுகளின் நிலை என்ன என்ற கேள்வியும் பொதுமக்களுக்கு எழுந்துள்ளது. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக பொதுமக்களுக்கு அதிகமாக எழும் கேள்விகள் குறித்து விளக்கம் அளித்துள்ளது.
ரிசர்வ் வங்கி அளித்த விளக்கங்கள்:
2016ஐ போன்று இதுவும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையா?
இல்லை. கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக, மத்திய அரசு கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பை அறிவித்தது. அதன்படி, நாட்டின் பணப்புழக்கத்தில் இருந்த ரூ 1000 மற்றும் 500 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், தற்போது ஆர்பிஐ ரூபாய் நோட்டு கொள்கையின் கீழ் (clean Note policy) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் கீழ், ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக ஆர்பிஐ அறிவித்துள்ளது. இது, வங்கிகளுக்கும், பொதுமக்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகள் ஆகும்.
எவ்வாறு செயல்படும்?
வரும் மே 23ம் தேதி முதல் செப்டம்பர் 30 வரை பொதுமக்கள் தங்கள் கைவசமுள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியின் அலுவலகங்கள் அல்லது வங்கிக் கிளைகளில் ஒப்படைத்து, அவரவருக்குரிய வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் என்று ஆர்பிஐ தெரிவித்துளளது.
(அல்லது)
வாடிக்கையாளர்கள், தங்களிடம் உள்ள 2,000 நோட்டுகளை வேறு பணத் தாள்களாக மாற்றிக் கொள்ளலாம். ஆனால், நடைமுறைச் சிக்கல்களை தவிர்க்கும் விதமாக, வாடிக்கையாளர் ஒருமுறை 20,000 ரூபாய் மதிப்புள்ள 2,000 நோட்டுகளை மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 30க்கு மேல் 2000 ரூபாய் நோட்டுகள் என்னாகும்?
செப்டம்பர் 30ம் தேதிக்கு மேல் 2000 ரூபாய் நோட்டுகள் சட்டரீதியான பணமாகவே இருக்கும். 2000 ரூபாய் நோட்டுகளை வைத்து பொதுமக்கள் தங்களுக்கு இடையே பொருட்கள், சேவைகள் முதலியவற்றை வழக்கம் போல் பரிமாறிக்கொள்ளவும். இருப்பினும், பொது மக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை, செப்டம்பர் 30ம் தேதிக்குள் ஒப்படைக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கி அறிவுரை வழங்கியுள்ளது.
ரிசர்வ் வங்கி விளக்கம்
2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கும்/அல்லது மாற்றுவதற்கும் 2023 செப்டம்பர் 30-ம் தேதி வரையிலான அவகாசத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுவதாகவே விளக்கம் அளித்துள்ளது. எனவே, செப்டம்பர் 30ம் தேதிக்குப் பிறகும் 2000 ரூபாய் நோட்டுகளை வழக்கம் போல் பரிமாறிக் கொள்ளலாம்.
ஏன் இந்த நடவடிக்கை?
கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பை அறிவித்தது. அதன்படி, 8 நவம்பர் 2016 அன்று நள்ளிரவு முதல் நாட்டின் பணப்புழக்கத்தில் இருந்த ரூ 1000 மற்றும் 500 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.
அதேசமயம், ரிசர்வ் வங்கி புதிய ரூ 500 மற்றும் 2000 நோட்டுகளை வெளியிட்டது. பணப் புழக்கத்தால் ஏற்பட்ட பிரச்சனைகளை சமாளிக்கும் வகையில் இந்த புதிய ரூ.2000 நோட்டுகளை ஆர்பிஐ வெளியிட்டது. இதையடுத்து, 2018-19 நிதியாண்டில் இருந்து ரூ.2000 நோட்டுகளை அச்சிடுவதை ஆர்பிஐ முற்றிலுமாக நிறுத்தியது.
இந்நிலையில், பணமதிப்பிழப்பு பிரச்சனைகள் குறைந்துள்ளதாலும், நாட்டின் பண பரிமாற்றத்திற்கு இதர ரூபாய் நோட்டுகள் போதுமான அளவில் இருப்பதாலும் ரூ. 2000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக ஆர்பிஐ அறிவித்துள்ளது.
மேலும், தற்போது புழக்கத்தில் உள்ள 89%க்கும் அதிகமான 2000 ரூபாய் நோட்டுகள் 2017ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு முந்தைய காலத்தில் அச்சிடப்பட்டவை. பொதுவாக, ரூபாய் நோட்டுகளின் ஆயுட்காலம் 4-5 ஆண்டுகள் வரையாகும். எனவே, தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் தங்களது ஆயுட் காலத்தை நெருங்குகின்றன.
மேலும், மார்ச் 31ல் உட்சபட்சமாக, ஒட்டுமொத்த பணப்புழக்கத்தில் ரூ.2000 நோட்டுகளின் விகிதம் 37.3 விதம் இருந்த நிலையில், 2023 மார்ச் 31ல் இந்த எண்ணிக்கை வெறும் 10.8% ஆக குறைந்துள்ளது. மேலும், நாட்டில் பொதுமான பண பரிமாற்றங்களில் 2000 ரூபாய் நோட்டுகள் பயன்படுத்தப்பட வில்லை என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, ரூ. 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment