``வாரத்துக்கு 30 நிமிடங்களுக்கு மேல் போன் பேசினால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும்" என்று சமீபத்திய ஆய்வு கூறுகிறது.
ஐரோப்பியன் ஹார்ட் ஜர்னலில் (European Heart Journal) வெளியாகி உள்ள ஆய்வு ஒரு வாரத்தில் 30 நிமிடங்கள் அல்லது அதற்கும் மேல் ஒருவர் போன் பேசினால், அவருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட 12 சதவிகிதம் வாய்ப்பு உள்ளதாகக் கூறுகிறது. மேலும், மொபைல் போன் பயன்படுத்தாதவர்களைவிட பயன்படுத்து பவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட 7 சதவிகிதம் வாய்ப்பு உள்ளது என்றும் கூறியுள்ளது.
இன்றைய காலகட்டத்தில், 30 நிமிடங்களுக்கு மேல் போன் பேசியாக வேண்டும் என்ற நிலை பலருக்கும் உள்ளது. நிலைமை அப்படி இருக்க இந்த ஆய்வுத் தகவல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொபைல் போன் பயன்படுத்தினால் உண்மையில் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுமா என்ற கேள்விக்கு சிவகங்கையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் ப.ஃபரூக் அப்துல்லா விளக்கம் அளிக்கிறார்...
``இன்றைய நவீன காலகட்டத்தில் அனைவரும் தினமும் குறைந்தபட்சம் 15 - 20 நிமிடங்களாகவது போன் பேசுகிறோம். இதுவே வாரத்துக்கு 2 - 3 மணி நேரம் ஆகிறது. ஆக பெரும்பாலும் மக்கள் இப்போது 30 நிமிடங்களுக்கு மேல்தான் போன் பேசுகிறார்கள். இதுமட்டுமல்லாமல் பேசுவதைத் தவிர, சராசரியாக 3 - 4 மணி நேரம் பிற தேவைகளுக்காக போனை உபயோகிக்கிறோம்.
இந்த ஆய்வில் கலந்துகொண்டவர்களின் சராசரி வயது 54. பொதுவாகவே இந்த வயதில் பெரும்பாலானவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் இருக்கும். இந்த ஆய்வு அதிகம் போன் பயன்படுத்தாதவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் அதிகமாக ஏற்படுவதில்லை என்று கூறுகிறது. ஒருவேளை இவர்கள் ரத்த அழுத்தம் உண்டாவதற்கான காரணிகளை அதிகம் கொண்டிருக் காதவர்களாக இருக்கலாம்.
உயர் ரத்த அழுத்தம் என்பது உடல் பருமன், புகை, மது, மரபணுக் காரணி, மன அழுத்தம், தூக்கமின்மை, உடல் உழைப்பு இல்லாமை போன்ற காரணங்களால் ஏற்படுவது.
தனிமையில் இருப்பவர்கள், மன அழுத்தம் உடையவர்கள், பணி நிமித்தமாக போன் பயன்படுத்துபவர்கள், வாழ்க்கை துணையைப் பிரிந்து தொலைவில் இருப்பவர்கள்... இவர்கள் அனைவரும் அதிகமாக போன் பேசுபவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு இயல்பாகவே உயர் ரத்த அழுத்தம் வர வாய்ப்புகள் உள்ளன.
முக்கியமாக, இன்றைய உலகத்தில் 30 நிமிடங்களுக்கு மேல் போன் உபயோகிக்கக் கூடாது என்பது சாத்தியமா என்று தெரியவில்லை. மக்கள் அதைப் பின்பற்றுவார்களா என்பதும் கேள்விக்குறிதான். எனவே, இப்போதைக்கு அதிகம் போன் பேசுவதால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் என்று கூற முடியாது" என்று கூறுகிறார்.
No comments:
Post a Comment