Join THAMIZHKADAL WhatsApp Groups
தற்காலிக ஆசிரியர்களுக்கு, அடுத்த ஐந்து மாதங்களுக்கு, பணி நீட்டிப்பு வழங்கி, ஊதியத்திற்கான தொகையும் விடுவிக்கப்பட்டுள்ளதால், அரசுப்பணிக்காக போராடி வரும், 'டெட்' தேர்ச்சி பெற்றவர்கள் கொந்தளித்துள்ளனர்.தொடக்க கல்வித்துறையில், மாவட்ட வாரியாக, 5 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள், 280 பட்டதாரி ஆசிரியர்கள், அந்தந்த பள்ளிகளில் செயல்படும், மேலாண்மை குழு வாயிலாக, கடந்தாண்டு நியமிக்கப்பட்டனர்.
இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் 12 ஆயிரம், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு, அரசால் வழங்கப்பட்டது. இவர்களுக்கு அடுத்த கல்வியாண்டில், அக்டோபர் மாதம் வரை, பணிநீட்டிப்பு ஆணை வழங்கியதோடு, ஊதியத்திற்கான தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.
இதனால், சென்னை நுங்கம்பாக்கத்தில், 'டெட்' தேர்ச்சி பெற்று, 10 ஆண்டுகளாக பணிவாய்ப்பு கிடைக்காததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.
'டெட்' தேர்ச்சி பெற்ற ஆசிரியர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் புகழேந்தி கூறியதாவது:டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நியமன தேர்வு நடத்தி, அரசுப்பணி வழங்குவதாக, 2018ல் அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், 2013-17 வரை, இத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகும், 25 ஆயிரம் பேர், பணிவாய்ப்பு இல்லாமல் காத்திருக்கிறோம்.
நியமன தேர்வு அரசாணைக்கு முன்பு, 'டெட்' எழுதியோருக்கு விலக்கு அளித்து, காலியிடங்களுக்கு பணி ஆணை வழங்குமாறு, நான்கு நாட்களாக, சென்னையில் போராடி வருகிறோம். இந்நிலையில், தொடக்க கல்வித்துறையில், அடுத்த ஐந்து மாதங்களுக்கு, தற்காலிக ஆசிரியர்களை பணி நீட்டிப்பு செய்திருப்பது வேதனை அளிக்கிறது.
போராட்ட குழுவினரின் கோரிக்கைக்கு செவிசாய்க்க கூட அதிகாரிகள் தயாராக இல்லை. இதனால், தொடக்க கல்வித்தரம் சரியுமே தவிர உயராது.இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment