Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, May 6, 2023

வரும் கல்வி ஆண்டில் அரசு மாதிரி பள்ளி தொடக்கம் - சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் அரசு மாதிரி பள்ளி செயல்படவுள்ளது. இப்பள்ளி தற்காலிகமாக செயல்படவுள்ள வல்லநாடு தனியார் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் ஆர்வமும் திறமையும் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் உயர்கல்விக் கனவுகளை நனவாக்கும் வகையில் மாவட்டம் தோறும் அரசு மாதிரி பள்ளி தொடங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். அதன்படி முதல் கட்டமாக 25 மாவட்டங்களில் அரசு மாதிரி பள்ளிகள் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இத்திட்டம் மேலும் 13 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு அந்த மாவட்டங்களிலும் தலா ஒரு மாதிரிப் பள்ளி உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு அரசு மாதிரி பள்ளி வரும் கல்வியாண்டு முதல் தொடங்கப்படவுள்ளது. வல்லநாடு இன்பென்ட் ஜீசஸ் கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் இந்த அரசு மாதிரி பள்ளி தற்காலிகமாக செயல்படவுள்ளது.

இதையடுத்து வல்லநாடு இன்பென்ட் ஜீசஸ் கல்லூரி வளாகத்தில் உள்ள வகுப்பறைகள், வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் நேற்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் ஆட்சியர் கூறியதாவது:

முதல்வர் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் அரசு மாதிரி பள்ளி தொடங்கப்படுகிறது. வல்லநாடு இன்பென்ட் ஜீசஸ் கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் இந்த பள்ளி தற்காலிகமாக செயல்படும்.

இப்பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வி மாணவ, மாணவிகளுக்கு கற்பிக்கப்படவுள்ளது. அந்த வகையில் 9-ம் வகுப்பில் 160 மாணவ, மாணவிகளும், 10-ம் வகுப்பில் 160 மாணவ, மாணவிகளும், 11-ம் வகுப்பில் 240 மாணவ, மாணவிகளும், 12-ம் வகுப்பில் 240 மாணவ, மாணவிகளும் என மொத்தம் 800 மாணவ, மாணவிகள் கல்வி பயிலும் வகையில் இப்பள்ளி தொடங்கப்படவுள்ளது.

தனித்தனி விடுதி: இது உண்டு உறைவிடப்பள்ளி என்பதால் மாணவ, மாணவிகள் தங்கிப் படிக்கும் வகையில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் 400 மாணவர்களுக்கு ஒரு விடுதியும், 400 மாணவிகளுக்கு ஒரு விடுதியும் செயல்படவுள்ளது.

சிறப்பு கற்றல் வசதி:

மேலும், அரசு மாதிரி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கல்வி, நுண்கலை மற்றும் விளையாட்டுத் துறைகளில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பையும், சிறந்த கல்வி நிறுவனங்களில் தொழில்முறை கல்வி பிரிவுகளில் சேர்ந்து பயிலும் வாய்ப்பினை உறுதி செய்தலும், சிறப்பு கற்றல் அமைப்பு மூலம் மாணவர்களின் ஒட்டுமொத்த ஆளுமைகளை மெருகேற்றி இணை கல்விச் செயல்களை மேம்படுத்துதலும், ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் அவர்களின் திறன், மனோதத்துவ அடிப்படையில் தொழில் வாய்ப்புகளை மேற்கொள்ள தொழில் வழிகாட்டுதலும் இப்பள்ளியின் முக்கிய நோக்கமாகும் என்றார்.

ஆய்வின் போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெஜினி, மண்டல ஒருங்கிணைப்பாளர் (மாதிரி பள்ளிகள்) ஜெய, மாதிரி பள்ளி தலைமை ஆசிரியர் கஜேந்திரபாபு, வைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன்,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை) பெ.கணேசன், இன்பென்ட் ஜீசஸ் கல்லூரி செயலாளர் ஆனந்த் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News