மாதம் 1000 ரூபாய் எவ்வாறு வழங்கப்படும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்தது. வங்கி கணக்கில் நேரடியாக வழங்கப்படுமா, அல்லது ரேஷன் கடைகளில் ரொக்கமாக கொடுக்கப்படுமா, ஒரு கோடி பேரை தேர்வு செய்துவிட்டனாரா என்று பல்வேறு கேள்விகள் எழுந்தன. இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில் இதுகுறித்து விசாரிக்கையில் தமிழக அரசின் திட்டம் குறித்து தெரிய வந்துள்ளது.
மகளிர் உரிமைத் தொகை பயனாளிகள் யார்?
அரசு ஊழியர்களின் குடும்பத்தினர், ஓய்வூதியம் பெறும் குடும்பத்தினர், வருமான வரி செலுத்துபவர்கள் இந்த திட்டத்தில் பயனாளிகளாக சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. தகுதி வாய்ந்த ஒரு கோடி பேரை தேர்வு செய்யும் பணிகள் மாவட்ட வாரியாக மேற்கொள்ளப்படுகின்றன. விரைவில் அவை இறுதி செய்யப்படும் என்கிறார்கள்.
வங்கி கணக்கில் வரவு வைப்பதில் என்ன சிக்கல்?
வங்கி கணக்கில் வரவு வைத்தால் மட்டுமே பயனாளர்கள் அனைவருக்கும் விடுபடாமல் பணம் சென்று சேரும். ஆனால் பலர் வங்கிகளில் கடன் பெற்றுள்ளனர். இ.எம்.ஐ செலுத்துகின்றனர். இதனால் அரசு வழங்கும் தொகையை கண்ணில் பார்க்கும் முன்னர் இ.எம்.ஐ ஆக எடுத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமல்லாமல் மினிமம் பேலன்ஸ் செலுத்தவில்லை என்றாலும் வங்கிகள் பணத்தை எடுத்துக் கொள்ள நேரிடும். இதனாலும் மக்களால் பணத்தை எடுக்க முடியாமல் போகலாம்.
ரேஷன் கடைகளில் என்ன சிக்கல்?
பொங்கல் பரிசு தொகை வழங்குவது போல் ரொக்கமாக ரேஷன் கடைகளில் ஒவ்வொரு மாதமும் வழங்கினாலும் தேவையற்ற குழப்பங்கள் நேரிடக்கூடும் என்பதால் வேறொரு திட்டம் திட்டியுள்ளதாக சொல்கிறார்கள். கூட்டுறவு வங்கிகளின் சார்பில் ஒவ்வொரு பயனாளிக்கும் தனியாக கணக்கு தொடங்கப்பட்டு அதில் வரவு வைக்கப்படும் என்று கூறுகிறார்கள். இந்த பணத்தை மைக்ரோ ஏடிஎம் மிஷின்கள் மூலம் ரேஷன் கடைகளிலேயே பெற்றுக் கொள்ளலாம் என்கிறார்கள்.
தமிழக அரசின் முடிவு என்ன?
பணத்தை நேரடியாக வந்து பெற்றுக் கொள்வதன் மூலம் அது குறித்து மக்கள் மத்தியில் தொடர்ந்து பேச்சு இருக்கும், இது திமுகவுக்கு ஆதரவு மனநிலையை மக்கள் மத்தியில் விதைக்கும் என்கிறார்கள். அதேசமயம் மைக்ரோ ஏடிஎம் மிஷின்கள் மூலமாக எடுக்க முடியும் என்ற யோசனை குளறுபடிகளை தவிர்க்க உதவும் என்று கூறுகின்றனர். இதில் உள்ள சாதக, பாதக அம்சங்கள் தொடர்ந்து ஆய்வுக்குட்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படும் என்கின்றனர்.
No comments:
Post a Comment