மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள 12 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கணிதம், இயற்பியல் பாடப்பிரிவுகளை நீக்கிவிட்டு, புதிய பாடப்பிரிவுகளை சேர்க்க கல்லூரிக் கல்வி இயக்குநரகம் அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து கல்லூரிக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்துஅரசுக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒரு சில கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் இடையே வரவேற்பு இல்லாத, மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பாடப்பிரிவுகளை மட்டும் நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக தேவையின் அடிப்படையில் வேலைவாய்ப்பு அதிகமுள்ள புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அறிவித்தார்.
அதன்படி சேந்தமங்கலம், லால்குடி, வேப்பந்தட்டை, கடலாடி, சத்தியமங்கலம், பரமக்குடி, மாதனுார், கூடலுார், கோவில்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கணித படிப்பில் சேர்க்கை எண்ணிக்கை குறைவாக உள்ளது. அதனால் அந்த கல்லூரிகள் தேவைக்கேற்ப கணினி அறிவியல், தமிழ், உயிர் தொழில்நுட்பவியல், வணிக நிர்வாகவியல், தாவரவியல், பொருளியல் ஆகிய புதிய பாடப்பிரிவுகள் தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.
திட்டமலை அரசுக் கல்லூரியில் ஆங்கிலவழி கணித பாடப்பிரிவையும், நாகலாபுரம் அரசுக் கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் பாடப்பிரிவையும் தமிழ் வழிக்கு மாற்றி கொள்ளலாம். மொடக்குறிச்சி அரசுக் கல்லூரியில் இயற்பியலுக்குப் பதிலாக விலங்கியல் பாடப்பிரிவு தொடங்கலாம். புதிய பாடப்பிரிவுகளுக்கு அந்தந்த பல்கலைக்கழகங்களில் கல்லூரிகள் அனுமதி பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமதாஸ் வலியுறுத்தல்: இதற்கிடையே அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் கணிதம் உள்ளிட்ட படிப்புகளை நிறுத்தக்கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மாணவர் சேர்க்கை குறைவு என்ற ஒற்றைக் காரணத்தை மட்டும்வைத்துக் கொண்டு கணிதம் உள்ளிட்ட பட்டப்படிப்புகளை நிறுத்து வது அதிர்ச்சி அளிக்கிறது.
கணிதம் பட்டப்படிப்பையும் தொடர்ந்து நடத்திக் கொண்டே, புதிய பட்டப்படிப்புகளையும் தொடங்கி நடத்துவதற்கு அரசு கல்லூரிகளின் நிர்வாகங்களுக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும். மாணவர்கள் குறைவு என்பதற்காக பட்டப்படிப்புகளை நிறுத் தக் கூடாது.
கணிதப் படிப்பை புறக்கணிப்பது வரும் காலங்களில் உயர்கல்வியில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தும். அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு கணிதம்தான் அடிப்படை. எனவே, கணிதம் கற்றலை இனிமையாக மாற்றுதல், கணிதம் படிப்பவர்களுக்கு கூடுதல் கல்வி உதவித்தொகை வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் கணிதம் படிப்பதை தமிழக அரசு உறுதிசெய்ய முடியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment