சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெய் கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளி திரும்பிய மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த இரண்டு ஆண்டு தேர்ச்சி விகிதம் எப்படி இருந்தது என்று அனைவருக்கும் தெரியும். தற்போது அதனை நடப்பாண்டு முறியடிக்கும் விதமாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் இலக்கு நிர்ணயம் செய்து கொண்டு செயல்பட வேண்டும். குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் உறுதி செய்யும் விதமாக தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இன்றைய தினம் 8,340 நடுநிலைப்பள்ளிகள், 3,547 உயர்நிலை மற்றும் 4,221 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 16 ஆயிரத்து 108 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் முதலாம் வகுப்பில் 1.31 லட்சம் குழந்தைகள் சேர்ந்துள்ளனர். 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் வரை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மாநில கல்வி தொடர்பான குழுவில் புதிதாக இருவர் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தயாரிக்கும் அறிக்கை முதல்வரிடம் அளிக்கப்பட்டு அதன் அடிப்படையில் முடிவுகள் மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், இலவச பஸ் பாஸ் பொருத்தவரை பள்ளி சீருடை அணிந்து வந்தாலே இலவசமாக பயணம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆசிரியர் நியமனம் குறித்து பேசிய போது, கடந்த ஓராண்டில் மட்டும் 25,000 அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். அதில் ஆசிரியர்களும் இருக்கின்றனர். அதற்கான காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், டிஆர்பியில் சீர்திருத்தங்கள் செய்திருக்கிறோம். கடந்த 2013 - 2014ஆம் ஆண்டில் இருந்தே பின்னடைவு இருந்து கொண்டு தான் இருக்கிறது.
ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதில் இருக்கும் நடைமுறை சிக்கல்களை களைந்து செய்ய வேண்டும் என விரும்புகிறோம். போட்டி தேர்வு இல்லாத விதமாக உரிய ஆலோசனை செய்து ஆசிரியர்கள் நியமனத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்" என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment