தமிழ்நாட்டில் 2023-24-ம் கல்வியாண்டுக்கான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான பொது கலந்தாய்வு தொடங்கியது.
தமிழ்நாட்டில் கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் 1,07,299 இடங்கள் உள்ளன. இந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த மே 8-ம் தேதி தொடங்கியது. https://www.tngasa.in/ எனும் இணையதளம் வழியாக மே 22-ம் தேதி வரை மாணவ-மாணவிகள் விண்ணப்பித்தனர். அதன்படி 2,46,295 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மே 25-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
அதன்படி முதற்கட்டமாக சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு மே 29-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெற்றது. 3 நாட்கள் நடந்த இந்த சிறப்பு கலந்தாய்வில் 1,502 ஆண்கள், மற்றும் 1,861 பெண்கள் என மொத்தம் 3,363 பேர் தங்களுக்கான இடங்களை தேர்வு செய்துள்ளனர். இவர்களில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்தவர்களின் எண்ணிக்கை 738 என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான பொது கலந்தாய்வும் தொடங்கியது. இந்த கலந்தாய்வு வரும் 10-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மாணவர்களின் செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு குறுஞ்செய்தி வாயிலாக கலந்தாய்வு நாள், நேரம் உள்ளிட்ட விவரங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இரண்டாம்கட்ட பொது கலந்தாய்வு ஜூன் 12-ம் தேதி தொடங்கி ஜூன் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 22-ம் தேதி துவங்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment